மணிப்பூரில் ஏழு சட்டவிரோத பதுங்கு குழிகள் அழிப்பு..! இரண்டு மாவட்டங்களில் 7 மணி நேரம் ஊரடங்கு தளர்வு..!

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக இரு பிரிவினர்கள் இடையே வன்முறை வெடித்து, 100க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்ததோடு, பலர் காயமடைந்தனர். மேலும், இரண்டு

ManipuViolence

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக இரு பிரிவினர்கள் இடையே வன்முறை வெடித்து, 100க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்ததோடு, பலர் காயமடைந்தனர். மேலும், இரண்டு பெண்களை ஒரு கொடூர கும்பல் நிர்வாணப்படுத்தி, சாலையில் அழைத்துச்சென்ற வீடியோவும் வெளியாகி, உலகெங்கிலும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

பிறகு, மணிப்பூர் வன்முறை மற்றும் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரம் தொடர்பாக வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, மத்திய, மாநில அரசு மீது உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தியை தெரிவித்தது. மேலும், மணிப்பூர் டிஜிபி தனிப்பட்ட முறையில் நீதிமன்றத்தின் முன்பாக ஆஜராகி விளக்கங்களை அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வன்முறையால் பாதிக்கப்பட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் புதிதாக வன்முறைகள் ஏற்படுவதை தடுக்கவும் மக்களை பாதுகாக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இம்பால் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டது. தற்பொழுது, இந்த உத்தரவானது ஏழு மணி நேரம் தளர்க்கப்பட்டுள்ளது.

அதன்படி, பொது மக்கள் மருந்துகள் மற்றும் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு வசதியாக, இன்று (ஆகஸ்ட் 4ம் தேதி) காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரை ஊரடங்கு உத்தரவை மணிப்பூர் அரசு தளர்த்தியுள்ளது.

இதற்கிடையில், மணிப்பூரில் உள்ள கூட்டுப் பாதுகாப்புப் படையினர் கோட்ரூக் மலைத்தொடரில் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு ஏழு சட்டவிரோத பதுங்கு குழிகளை அழித்துள்ளனர் என்று மணிப்பூர் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், மணிப்பூரின் பல்வேறு மாவட்டங்களில், மலை மற்றும் பள்ளத்தாக்கில் மொத்தம் 129 சோதனைச் சாவடிகள் நிறுவப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.