மாநிலங்களவையில் பதவியேற்றுக்கொண்ட திமுக எம்.பி.க்கள் சிவலிங்கம், சல்மா, வில்சன்.!
மாநிலங்களவையில் திமுக எம்.பி.க்கள் வில்சன், சல்மா மற்றும் சிவலிங்கம் ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர்.

டெல்லி : தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ்.ஆர்.சிவலிங்கம், கவிஞர் சல்மா மற்றும் பி.வில்சன் ஆகியோர் இன்று டெல்லி புது டெல்லியில் உள்ள சன்சத் பவனில் நடைபெற்ற மாநிலங்களவை உறுப்பினர்களாக தமிழில் உறுதிமொழி எடுத்து பதவியேற்று கொண்டனர்.
இவர்களுடன், திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனும் தமிழில் உறுதிமொழி வாசித்து உறுப்பினர்களாக பதவியேற்றார். இந்த நான்கு வேட்பாளர்களும் ஜூன் மாதம் நடந்த மாநிலங்களவை தேர்தலில் எதிர்ப்பின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
ஆனால், அதிமுகவின் இன்பதுரை, தனபால் ஆகிய இருவரும் வரும் திங்கள்கிழமை பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த வைகோ (மதிமுக), அன்புமணி ராமதாஸ் (பாமக), பி.வில்சன் (திமுக, மறுதேர்வு), எம்.முகமது அப்துல்லா (திமுக), என்.சந்திரசேகரன் (அதிமுக), எம்.சண்முகம் (திமுக) ஆகியோரின் பதவிக்காலம் முடிவடைந்தது. இவர்களுக்கு ராஜ்யசபாவில் நடைபெற்ற நிகழ்வில் பிரியாவிடை அளிக்கப்பட்டது.