பேச்சுவார்த்தைகள் தோல்வி.. மீண்டும் டெல்லி நோக்கி பேரணி..!
அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம், எம்.எஸ். சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்துதல், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம், விவசாயக் கடன் தள்ளுபடி போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 13-ம் தேதி முதல் ‘டெல்லி சலோ’ போராட்டத்தைத் தொடங்கினர்.
இதற்கிடையில் மத்திய அரசுடன் விவசாயிகள் 3 கட்டமாக நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாத நிலையில் நேற்று முன்தினம் இரவு 4-வது சுற்று பேச்சுவார்த்தை இரவு 9 மணி முதல் இரவு 1 மணி வரை நடைபெற்றது. பேச்சுவார்த்தை முடிந்த பிறகு பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ” ஐந்து ஆண்டுகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையில் பருப்பு வகைகள், மக்காச்சோளம் மற்றும் பருத்தி பயிர்களை அரசு நிறுவனங்களால் கொள்முதல் செய்யப்படும் என தெரிவித்தார்.
பருப்பு வகைகள், மக்காச்சோளம் மற்றும் பருத்தி பயிர்களை ஐந்து ஆண்டுகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையில் வாங்குவதாக மத்திய அரசு கூறியதை ஏற்க மறுத்த விவசாயிகள் இது ஒரு சில பயிர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதால் அது அர்த்தமற்றது என்றும், மற்ற பயிர்களை புறக்கணிப்பதாகவும் கூறி திட்டமிட்டபடி இன்று காலை 11 மணிக்கு மீண்டும் டெல்லிக்குள் நுழைய ‘டெல்லி சலோ’ போராட்டத்தைத் தொடரப்போவதாக விவசாயிகள் அறிவித்தனர்.
இதனால் விவசாயிகள் இன்று டிராக்டர்கள் மற்றும் ஜே.சி.பி மூலம் டெல்லியை நோக்கி பேரணி செல்ல ஆயத்தம் ஆகி வருகின்றனர். இதன் காரணமாக பஞ்சாப் -ஹரியானா எல்லையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளன. விவசாயிகளின் டிராக்டர், ஜே.சி.பி வாகனங்களை தடுத்து நிறுத்த பஞ்சாப் டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதற்கிடையில் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக 177 சமூக வலைத்தள பக்கங்கள் தற்காலிகமாக மத்திய அரசு முடக்கம் செய்துள்ளனர். சுமார் ஒரு லட்சம் விவசாயிகள் பஞ்சாப்-ஹரியானா எல்லையில் உள்ள ஷம்புவில் உள்ளனர். கடந்த வாரம் முதல் அங்கு தங்கியுள்ளனர். டெல்லி நோக்கி விவசாயிகள் வராமல் இருக்க கான்கிரீட் தடுப்புகள், கம்பி வேலிகள் மற்றும் சாலையில் ஆணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், டெல்லியைச் சுற்றி பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.