ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த 8 குற்றவாளிகளுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
2002-ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 8 குற்றவாளிகளுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. கடந்த 2002ம் ஆண்டு குஜராத்தின் கோத்ரா ரயில் நிலையத்தில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் ராம பக்தர்கள் பயணித்த ஒரு பெட்டியில் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியது. இந்த கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் விசாரணை நீதிமன்றம் குற்றச்சாட்டப்பட்ட 11 பேருக்கு தூக்கு தண்டனையும், 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது.
பின்னர், தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து குஜராத் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த சமயத்தில் கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் 17 ஆண்டுகள் சிறையில் இருந்த ஃபரூக் என்பவருக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதுபோன்று, இவ்வழக்கில் மேலும் சிலர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்த நிலையில், குஜராத் அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த 8 குற்றவாளிகளுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. 8 குற்றவாளிகளுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட காலம் (17-18 ஆண்டுகள்) மற்றும் குற்றத்தில் அவர்களின் தனிப்பட்ட பங்கைக் கருத்தில் கொண்டு உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.