இந்தியா கூட்டணியை சார்ந்த கட்சியினர் மீண்டும் எதிர்க்கட்சி வரிசையில் அமர்வார்கள் என பிரதமர் மோடி விமர்சனம்.
மணிப்பூர் வன்முறை மற்றும் பழங்குடியின பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரம் குறித்து நாடாளுமன்ற இரு அவைகளிலும் பிரதமர் மோடி பேச வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடங்கி உள்ளது. அதுமட்டுமில்லாமல், மணிப்பூர் கொடூரம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச மறுப்பதால், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் முடிவு எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், பிரதமர் மோடி தலைமையில் பாஜக நாடாளுமன்ற குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது, எதிர்க்கட்சிகள் குறித்து கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். பிரதமர் பேசுகையில், எதிர்கட்சிகள் திசை தெரியாமல் சென்று கொண்டிருக்கின்றனர். இது போன்ற குறிக்கோளற்ற எதிர்க்கட்சிகளை நான் பார்த்ததே இல்லை. எதிர்கட்சிகள் கூட்டணி அதிக நாட்களுக்கு எதிர்கட்சியாகவே இருக்க வேண்டும்மென தீர்மானித்துவிட்டனர்.
அது தான் அவர்களின் தலையெழுத்தாகவும் உள்ளது. எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு இந்தியா என பெயர் வைத்துள்ளனர். தீவிரவாத அமைப்பான இந்தியன் முஜாஹிதீன் என்ற பெயரிலும், கிழக்கின் இந்தியா கம்பெனி என்ற பெயரிலும் கூட இந்தியா என்ற பெயர் உள்ளது. இந்தியா என்ற பெயரை தீவிரவாத அமைப்புகளும் கூட பயன்படுத்துகின்றன என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். மேலும், நாட்டு மக்களின் வளர்ச்சிக்காக நாம் உழைக்க வேண்டும். உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது. பாஜக அதை மேலும் உயர்த்தும் என கூறினார்.
