மகாராஷ்டிராவில் என்சிபியிலிருந்து எம்.எல்.ஏக்கள் ஆளும் என்.டி.ஏ கூட்டணியில் இணைந்தது குறித்து சரத் பவார் பேட்டி.
இன்று மகாராஷ்டிர அரசியலில் பெரும் திருப்பமாக, எதிர்க்கட்சித்தலைவர் அஜித் பவார் மற்றும் மற்ற தேசியவாத காங்கிரஸ்(என்சிபி) கட்சியின் எம்.எல்.ஏக்கள் சிலர் ஆளும் சிவசேனா மற்றும் பாஜக கூட்டணியில் இணைந்துள்ளனர். மேலும் இன்று ஆளுநர் மாளிகையில் அஜித் பவார் மற்றும் 9 என்சிபி எம்.எல்.ஏக்கள் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
அஜித் பவார் துணை முதலமைச்சராக பதவியேற்றார். இந்த நிலையில் என்சிபி யின் தலைவர் சரத் பவார், இது குறித்து பேசியுள்ளார். அவர் கூறும்போது, எனது கட்சி உடைந்ததாக நான் கூறமாட்டேன், இந்த பிரச்சினை எனக்கு மட்டுமல்ல, மக்களின் பிரச்சினையும் கூட. வெளியேறியவர்களின் எதிர்காலம் குறித்து கவலைப்படுவதாகவும், இதற்கான பெருமை பிரதமர் மோடிக்கே சேரும் என கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறும்போது, ஜூலை 6 ஆம் தேதி அனைத்து எதிர்க்கட்சிகளின் கூட்டம் கூடுவதற்கும், அதில் சில முக்கிய பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டு கட்சிக்குள் சில மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் எனவும் அழைப்பு விடுத்திருந்தேன். அதற்கு முன் கட்சியினர் அவர்களது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.
இது புதிதல்ல, 1980 யிலும் கட்சியில் 58 எம்.எல்.ஏக்களில் அனைவரும் பிரிந்து 6 எம்.எல்.ஏக்களுடன் கட்சியை பலப்படுத்தினேன். தற்போது அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதை அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் சபாநாயகர் முடிவு செய்வார், நாங்கள் கட்சியை மீண்டும் பலப்படுத்த பாடுபடுவோம் என அவர் கூறியுள்ளார்.
