ஜல்லிக்கட்டை விளையாட்டு அமைச்சகம் அங்கீகரிக்கவில்லை – மத்திய அரசு

ஜல்லிக்கட்டு, மாட்டுவண்டி போட்டிகளை எந்த துறையின் கீழும் அங்கீகரிக்கவில்லை என மத்திய அரசு தகவல்.

ஜல்லிக்கட்டு, மாட்டுவண்டி போட்டிகளை எந்த துறையின் கீழும் அங்கீகரிக்கவில்லை என மத்திய அரசு தகவல்.

ஜல்லிக்கட்டு, மாட்டுவண்டி பந்தயத்தை விளையாட்டு அமைச்சகம் அங்கீகரிக்கவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கேலோ இந்தியா உட்பட எந்த திட்டத்தின் கீழும் அங்கீகரிக்கவில்லை என மக்களவையில் மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர் தகவல் தெரிவித்துள்ளார். மாட்டுவண்டி பந்தயம் மற்றும் ஜல்லிக்கட்டு போட்டியை ஊக்குவிக்கும் திட்டமும் இல்லை என்று கூறியுள்ளார்.

இந்தியாவில் மாட்டுவண்டி பந்தயம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதா என மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர் பதிலளித்து இவ்வாறு தெரிவித்தார். ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த 2014ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தடை விதித்த நிலையில், தமிழக அரசு அவசர சட்டம் இயற்றி 2017ம் ஆண்டு முதல் போட்டியை நடத்தி வருகிறது.

மேலும், இந்த அவசர சட்டத்தை எதிர்த்து, ‘பீட்டா’ உள்ளிட்ட அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, அது தொடர்பான வழக்குகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ஜல்லிக்கட்டு, மாட்டுவண்டி பந்தயத்தை விளையாட்டு அமைச்சகம் அங்கீகரிக்கவில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.