“கரப்பான் பூச்சிகள்” என இளைஞர்களை விமர்சித்த நீதிபதி? இணையத்தில் வெடித்த Cockroach Janta Party!

தலைமை நீதிபதி சூர்யகாந்த்தின் கரப்பான் பூச்சி கருத்திற்கு எதிராக தொடங்கப்பட்ட 'Cockroach Janta Party' இன்ஸ்டா பக்கத்திற்கு பெரிய ஆதரவு கிடைத்துள்ளது.

Hero Image

டெல்லி : இந்தியாவில் சமூக வலைதள அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பெயராக தற்போது “Cockroach Janta Party” மாறியுள்ளது. இதற்கு காரணம் தலைமை நீதிபதி சூர்யகாந்த் வேலை இல்லாத சில இளைஞர்களை “கரப்பான் பூச்சிகள்” மற்றும் “ஒட்டுண்ணிகள்” போல நடந்து கொள்கிறார்கள் என்று பேசியதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியதை தொடர்ந்து, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இளைஞர்கள் இந்த புதிய இணைய இயக்கத்தை தொடங்கியுள்ளனர்.

“எல்லா கரப்பான் பூச்சிகளும் ஒன்றானால்?”

இந்த இயக்கத்தை அபிஜீத் திப்கே என்ற இளைஞர் சமூக வலைதளங்களில் தொடங்கியுள்ளார். “எல்லா கரப்பான் பூச்சிகளும் ஒன்று சேர்ந்தால் என்ன ஆகும் என்பதை காட்டுகிறோம்” என்ற வாசகத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த பக்கம், சில நாட்களிலேயே இணையத்தில் பெரும் ஆதரவை பெற்றுள்ளது.

குறிப்பாக, “Cockroach Janta Party” என்ற Instagram பக்கம் தற்போது 10.1 மில்லியன் Followers-ஐ கடந்துள்ளதாக கூறப்படுகிறது. இது, பாஜகவின் அதிகாரப்பூர்வ Instagram பக்கத்தை விட அதிகம் என்பதால், இந்த விவகாரம் மேலும் கவனத்தை ஈர்த்துள்ளது. பாஜக பக்கத்திற்கு தற்போது சுமார் 8.7 மில்லியன் Followers உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சாதனை

இந்த இயக்கம் தொடங்கப்பட்டு வெறும் 4 நாட்களிலேயே கோடிக்கணக்கான இளைஞர்கள் இணைந்திருப்பது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை கொண்டாடும் வகையில் அந்த பக்கத்தில், “இது வெறும் 4 நாட்களில் நடந்தது. இளைஞர்களின் சக்தியை குறைத்து மதிப்பிடாதீர்கள்” என்று பதிவு வெளியிடப்பட்டது.

அதேபோல், இயக்கத்தின் நிறுவனர் அபிஜீத் திப்கே, “உலகின் மிகப்பெரிய கட்சி என்று சொன்னார்கள்” என்று பாஜகவை மறைமுகமாக கிண்டல் செய்யும் வகையிலும் பதிவிட்டுள்ளார்.

முதலில் இது ஒரு Meme Page போல தொடங்கப்பட்டாலும், தற்போது அது இளைஞர்களின் அதிருப்தியை வெளிப்படுத்தும் இணைய இயக்கமாக மாறியுள்ளது. வேலைவாய்ப்பு இல்லாமை, போட்டித் தேர்வு அழுத்தம், பணவீக்கம், சமூக அழுத்தம் மற்றும் அரசியல் அதிகார மையங்களின் அணுகுமுறை ஆகியவற்றுக்கு எதிரான எதிர்ப்பை இளைஞர்கள் நகைச்சுவை மற்றும் மீம்கள் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த இயக்கம் தங்களை “Voice of the Lazy & Unemployed” என்று அழைத்துக் கொள்கிறது. அதாவது “சோம்பேறி மற்றும் வேலையில்லாத இளைஞர்களின் குரல்” என்று தங்களை வர்ணிக்கிறது.

சாதாரண அரசியல் கட்சிகளைப் போல கூட்டங்கள், மேடைகள் அல்லது தொலைக்காட்சி விவாதங்கள் மூலம் அல்லாமல், முழுமையாக இணைய கலாச்சாரத்தை மையமாக வைத்து இந்த இயக்கம் இயங்கி வருகிறது. அதிகப்படியான அரசியல் வசனங்கள், புரட்சிகர Poster-கள், அபத்தமான மீம்கள் மற்றும் Gen-Z நகைச்சுவைகள் மூலம் இளைஞர்களை இந்த இயக்கம் ஈர்த்து வருகிறது.

சமூக வலைதளங்களில் இந்த இயக்கம் வைரலாகி வந்தாலும், தேர்தல் அரசியலில் பாஜக இன்னும் இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் சக்தியாகவே உள்ளது. சமீபத்தில் நடைபெற்ற மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 207 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், “Cockroach Janta Party” உருவாக்கியுள்ள இந்த இணைய அலை, இந்திய இளைஞர்கள் தற்போது அரசியல் மற்றும் சமூக பிரச்சனைகளை எப்படி Meme Culture மற்றும் Satire மூலம் வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளனர் என்பதற்கான புதிய எடுத்துக்காட்டாக பார்க்கப்படுகிறது.

“கரப்பான் பூச்சிகள்” என இளைஞர்களை விமர்சித்த நீதிபதி? இணையத்தில் வெடித்த Cockroach Janta Party!