காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித்பால் சிங் அமிர்தசரஸில் பஞ்சாப் காவல்துறையிடம் சரணடைய உள்ளதாக தகவல்.
பஞ்சாப் மாநிலத்தில் காலிஸ்தான் ஆதரவாளரும், மறைந்த நடிகர் தீப் சித்துவால் உருவாக்கப்பட்ட அமைப்பான வாரிஸ் பஞ்சாப் டி அமைப்பின் தலைவருமான அம்ரித் பால் சிங்கின் அடாவடி மற்றும் வன்முறை உள்ளிட்ட நடவடிக்கைகள் அம்மாநில காவல்துறைக்கு பெரும் தலைவலியாக மாறியது.
கூட்டாளியை மீட்க யுத்தம்:
இதில், குறிப்பாக கடந்த மாதம் அம்ரித் பால் சிங்கின் கூட்டாளி ஒருவரை போலீசார் பிடித்து காவல் நிலையத்தில் வைத்திருந்தனர். அப்போது, அவரை மீட்க அம்ரித்பால் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைகளில் வாள்கள், துப்பாக்கிகளுடன் காவல் நிலையத்திற்குள் புகுந்து பெரும் யுத்தம் செய்வது போல் செயல்பட்டனர். இது வன்முறையாக மாறியதில் போலீஸ் அதிகாரி உள்பட 6 பேர் காயம் அடைந்தனர்.
காவல்துறை நடவடிக்கை:
இந்த விவகாரம் பஞ்சாப் மாநில காவல்துறைக்கு கடும் நெருக்கடியை கொடுத்தது. இதன் காரணமாக அம்ரித் பால் சிங்கை கைது செய்ய பஞ்சாப் காவல்துறை அதிரடி நடவடிக்கையை திட்டமிட்டது. கடந்த வாரம் திடீரென அதிரடி நடவடிக்கையில் இறங்கிய பஞ்சாப் மாநில அரசு அம்ரித் பால்சிங்கை கைது செய்யும் நடவடிக்கையை தீவிரப்படுத்தியது. ஆனால் அவரது ஆதரவாளர்கள் 70க்கும் மேற்பட்டோரை கைது செய்ய முடிந்ததே தவிர, அம்ரித் பால் சிங்கை கைது செய்ய முடியவில்லை.
இருப்பிடத்தை மாற்றும் சிங்:
போலீசார் பல இடங்களில் அம்ரித் பால் சிங்கை கைது செய்ய தேடி வந்த நிலையில், அவர் சிக்காமல் தலைமறைவானார். கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கும் மேலாக ஆயிரக்கணக்கான போலீசார் அம்ரித் பால் சிங்கை வலை வீசி தேடி வரும் நிலையில், தற்போது வரை கைது செய்ய முடியவில்லை. பஞ்சாப் மாநிலத்தை விட்டு தப்பிய அம்ரித்பால் சிங் அடிக்கடி தனது இருப்பிடத்தை மாற்றி வருகிறார்.
சரணடைய வாய்ப்பு:
இதனால், அம்ரித்பால் சிங்கை கைது செய்வதில் பஞ்சாப் காவல்துறைக்கு பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டன. மறுபக்கம், அம்ரித்பால் சிங் மாறு வேடங்களில் தெருக்கள் மற்றும் பல்வேறு இடங்களில் சுற்றி திரிந்த வீடியோ காட்சிகள் வெளியாகின. இந்த நிலையில், அமிர்தசரஸ் போலீஸ் கமிஷனர் நௌனிஹால் சிங் கூறுகையில், காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித்பால் சிங் பொற்கோவிலில் (அமிர்தசரஸில்) சரணடைய வாய்ப்பு இருப்பதாகவும், நகரின் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்தும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன என தெரிவித்துள்ளார்.
பேட்டியளிக்க விருப்பம்:
மேலும், அம்ரித்பால் சிங் சரணடைவது குறித்து உறுதிபட தகவல் வெளியாகவில்லை. அம்ரித்பால் சிங் சரணடைவதற்கு முன் சர்வதேச செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளிக்க திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால், அவர் தப்பிக்க வாய்ப்பில்லை என்பதை உணர்ந்து தனது முடிவை மாற்றிக் கொண்டதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. அவரது மாமா ஹர்ஜித் சிங்கைப் போலவே, அம்ரித்பால் சிங்கும் தொலைக்காட்சி சேனலுக்கு பேட்டி கொடுக்க விரும்பியுள்ளார்.