மக்களவையில் நேற்று ஒரு மசோதாவை நிறைவேற்றியது. இதன் கீழ் காஷ்மீர், டோக்ரி மற்றும் இந்தி, தற்போதுள்ள உருது மற்றும் ஆங்கிலம் தவிர, ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் அதிகாரப்பூர்வ மொழிகளாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் அதிகாரப்பூர்வ மொழி மசோதா, 2020 உள்துறை இணை அமைச்சர் ஜி கிஷன் ரெட்டியால் நாடாளுமன்றத்தின் கீழ் சபையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், ஒருசிறிய விவாதத்திற்குப் பிறகு நிறைவேற்றப்பட்டது.
உள்துறை அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி கூறுகையில், ஜம்மு-காஷ்மீர் மக்களின் கோரிக்கையாக, அவர்கள் பேசும் மொழி அதிகாரப்பூர்வ மொழியாக இருக்க வேண்டும் என்றார். ஜம்மு-காஷ்மீரின் மக்கள் தொகையில் 53.26 சதவீதம் பேர் காஷ்மீர் மொழி பேசுகிறார்கள் என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார். ஆனால் கடந்த 70 ஆண்டுகளாக இந்த மொழி உத்தியோகபூர்வ மொழியாக அங்கீகரிக்கப் படவில்லை என்று ரெட்டி கூறினார்.
“2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஜம்மு-காஷ்மீர் மக்களில் 53.26 சதவீதம் பேர் காஷ்மீரி பேசுகிறார்கள். ஆனால் அது உத்தியோகபூர்வ மொழியாக மாற்றப்படவில்லை. 20.64 சதவீதம் பேர் டோக்ரி பேசுகிறார்கள், 0.16 சதவீதம் பேர் உருது பேசுகிறார்கள், 2.30 சதவீத மக்கள் இந்தி பேசுகிறார்கள், என்று அவர் கூறினார்.
ஜம்மு-காஷ்மீரில் ஐந்து உத்தியோகபூர்வ மொழிகளை உருவாக்குவதன் மூலம் அரசாங்கம் குழப்பத்தை உருவாக்கி வருவதாக தேசிய மாநாட்டு எம்.பி. ஹஸ்னைன் மசூதி தெரிவித்தார். “நீங்கள் குழப்பத்தை உருவாக்குகிறீர்கள். எந்த மாநிலத்திலும் அல்லது யூனியன் பிரதேசத்திலும் ஐந்து அதிகாரப்பூர்வ மொழிகள் உள்ளனவா..? உருது என்பது மாநிலத்தில் ஒரு இணைப்பு மொழியாகும்” என்று அவர் கூறினார்.