மதுரை ஏய்ம்ஸ் தாமதமாவதற்கு தமிழக அரசே காரணம்..! அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு..!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20இல் துவங்கி நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் முதல் எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்த மணிப்பூர் விவகாரம் தொடர்பாக

NirmalaSitharaman

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20இல் துவங்கி நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் முதல் எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்த மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

அந்த விவாதத்தில் நேற்று மக்களவையில் பேசிய காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி மத்திய அரசு மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார். மணிப்பூரை இந்தியாவில் ஒரு பகுதியாக பிரதமர் மோடி பார்க்கவில்லை. மணிப்பூர் வன்முறையில் இந்தியாவை மத்திய அரசு கொன்றுவிட்டது என பல குற்றச்சாட்டுகளை வைத்தார்.

ராகுல்காந்தியின் பேச்சுக்கு பாஜக மூத்த அமைச்சர்கள் ஸ்மிருதி இரானி, அமித்ஷா, பாஜக எம்பிக்கள் என ஆளும்கட்சியினர் கடும் எதிர்ப்புகளை மக்களவையில் பதிவு செய்தனர். ராகுல்காந்தி பேசியதை முழுமையாக ஒளிபரப்பவில்லை என காங்கிரஸ் கட்சியினரும் குற்றம் சாட்டினார்.

இந்நிலையில், இன்று மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது பிரதமர் மோடி பதிலுரை அளிப்பார் என கூறப்பட்ட நிலையில், இன்று மாலை 4 மணிக்கு மக்களவையில் பிரதமர் மோடி உரையாற்றுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது பேசினார். அதில் கடந்த 2013 ஆம் ஆண்டில், மோர்கன் ஸ்டான்லி எனும் பன்னாட்டு நிதி அமைப்பு, இந்தியாவை உலகின் உலகின் ஐந்து பலவீனமான பொருளாதார நாடுகளின் பட்டியலில் சேர்த்தது. இந்தியா பலவீனமான பொருளாதார நாடாக அறிவிக்கப்பட்டது. என்று கூறினார்.

ஆனால், இன்று நாம் உலகின் மிக வேகமாக வளரும் பொருளாதார நாடாக இருக்கிறோம். இந்தியா தற்போது தனது எதிர்கால வளர்ச்சி குறித்து நம்பிக்கையுடனும் நேர்மறையாகவும் இருக்கும் ஒரு அரிய நிலையில் உள்ளது என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தெரிவித்தார்.

மேலும் அவர் பேசுகையில், மதுரை எய்ம்ஸ் குறித்து நிறைய தகவல்கள் உள்ளன. அதில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான மதிப்பீடு ஆனது 1200 கோடியிலிருந்து 1900 கோடியாக உயர்ந்துள்ளது. நில ஆக்கிரமிப்பை தாமதப்படுத்தியதன் காரணமாகவே 1200 கோடியிலிருந்து 1900 கோடியாக அதன் மதிப்பு உயர்ந்திருக்கிறது.

எனவே, இந்த பணி தாமதமானதற்கான பழியை தமிழக அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும். அதை மத்திய அரசு மேல் சுமத்த கூடாது. அதே சமயம், கொரோனா சமயத்தில் எங்களால் பார்வையிட முடியாமல் போனது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான திட்ட நிதி அதிகரிப்பால் தமிழக அரசுக்கு நிதி மற்றும் கடன் சுமை இல்லை என நிர்மலா சீதாராமன் கூறினார்.

இதனையடுத்து, மதுரை எய்ம்ஸ் குறித்து நிர்மலா சீதாராமன் தவறான தகவல்களை கூறுவதாக திமுக எம்பிக்கள் புகார் அளித்து, மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அவர்களுடன் காங்கிரஸ் மற்றும் என்சிபி எம்பிக்களும் வெளிநடப்பு செய்தனர்