மணிப்பூர் விவகாரத்தை எழுப்பி நாடாளுமன்ற இரு அவைகளிலும் ஒத்திவைப்பு.
மணிப்பூர் வன்முறையில் குக்கி பழங்குடியின பெண்கள் இருவரை நிர்வாணமாக இழுத்து சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருந்தது. கடந்த மே மாதம் 4ம் தேதி நடந்த இந்த சம்பவம் நேற்று முன்தினம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மணிப்பூரில் பெண்களுக்கு கொடூரம் இழைக்கப்பட்டதை தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட அரசியல் கடும் கண்டங்களை தெரிவித்து வருகின்றனர்.
இதுபோன்று பல்வேறு பரபரப்பான சூழல்களுக்கு இடையே நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகளின் அமளியில் ஈடுபட்டதால், நேற்று இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், மணிப்பூர் விவகாரத்தை எழுப்பி நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் 2 நாளாக அமளியில் ஈடுபட்டனர்.
எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. அதன்படி, மக்களவை 12 மணி வரையும் மாநிலங்களவை பிற்பகல் 2.30 மணி வரையும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க தயார் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். மணிப்பூர் பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்க விடாமல் சில கட்சிகள் தடுப்பதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
