மணிப்பூர் வன்முறை தொடர்பாக அறிக்கை அடிப்படையில் வழக்கை விசாரிக்க முடியும் என உச்சநீதிமன்றம் தகவல்.
மணிப்பூர் மாநிலத்தில் மெய்டீஸ் இன மக்களை பழங்குடியின பட்டியலில் சேர்ப்பதற்கு குக்கி இனத்தவர் எதிர்ப்பு தெரிவித்து தெரிவித்து வருகின்றனர். இதனால் கடந்த 2 மாதங்களாக மணிப்பூரில், தீவைத்து எரிப்பு உள்ளிட்ட வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த கலவரத்தில் இதுவரை 133 பேர் உயிரிழந்ததாகவும், 3000க்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும், இந்த கலவரங்களால் 60 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறி, அண்டை மாநிலங்களிலும், நிவாரண முகாம்களிலும் தஞ்சமடைந்துள்ளனர். மணிப்பூர் வன்முறையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கை எடுத்தும், வன்முறை நீடித்து வருகிறது. இதனால், மணிப்பூரில் பல்வேறு பகுதிகள் பதற்றம் நிலவி வருகிறது.
மணிப்பூர் வன்முறை தொடர்பான வழக்கும் உச்சநீதிமன்றத்தில் உள்ளது. இந்த நிலையில், 42 நாள் கோடை விடுமுறைக்கு பின் இன்று உச்சநீதிமன்றம் செயல்பட தொடங்கியுள்ளது. மணிப்பூர் வன்முறை, மகாராஷ்டிரா சிவசேனா எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்குகள் விசாரணைக்கு வரவுள்ளதாக கூறப்பட்டது. அந்தவகையில், மணிப்பூர் வன்முறை தொடர்பான வழக்கு விசாரணையின்போது, ஒரு வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, கலவரத்தை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், மறுவாழ்வு நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்க ஆணையிடப்பட்டுள்ளது. அறிக்கை அடிப்படையில் வழக்கை விசாரிக்க முடியும். எனவே, மணிப்பூர் வன்முறை தொடர்பாக தற்போதைய நிலவரம் குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய, மத்திய அரசுக்கு அறிவுறுத்தி, இந்த வழக்கை வரும் 9ம் தேதிக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு ஒத்திவைத்தது. மணிப்பூர் மாநிலத்தில் நிலைமை சீரடைந்து வருவதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
