மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான வழக்கு உச்சநீதிமன்றத்தில் வரும் ஜூலை 14 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.
டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின், ஜாமீன் மனு மீதான வழக்கு ஜூலை 17 ஆம் தேதி விசாரிக்கப்பட இருந்த நிலையில், ஜூலை 14ஆம் தேதி விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டது. மணீஷ் சிசோடியாவின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, அவரது மனைவி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளதாகக் கூறி வலியுறுத்தியுள்ளார்.
இதனால் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதி பி.எஸ்.நரசிம்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை ஜூலை 14ஆம் தேதி விசாரிக்க ஒப்புக்கொண்டது. முன்னதாக மணீஷ் சிசோடியா, டெல்லி கலால் கொள்கை ஊழல் தொடர்பான புகாரில் பிப்ரவரி 26 அன்று சிபிஐயால் முதன்முதலில் கைது செய்யப்பட்டார்.
கடந்த வாரம் தனது வழக்கு மீதான ஜாமின் மனுக்களில் டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து, மணீஷ் சிசோடியா உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
