“பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறினால், நடவடிக்கை தொடரும்” – அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை.!
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பாகிஸ்தான் எல்லையில் மீண்டும் அத்துமீறினால் கடுமையான நடவடிக்கைகள் தொடரும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

டெல்லி : பஹல்காமில் பொதுமக்கள் மற்றும் ராணுவத்தினரை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்துர் மூலம் உடனடியாக பதிலடி கொடுத்தது குறித்து ராஜ்நாத் சிங் மக்களவையில் விரிவாகப் பேசினார். ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து மக்களவையில் 16 மணி நேரம் விவாதம் நடைபெறவுள்ளது.
இன்று பிற்பகல் மக்களவையில் ஆபரேஷன் சிந்துர் குறித்த விவாதத்தைத் தொடங்கிவைத்து பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ”இந்திய ராணுவப் படைகள் நம் எல்லையை மட்டுமல்ல, நம் நாட்டின் மானத்தையும் சேர்த்தே காப்பாற்றியுள்ளன. இந்திய ராணுவத்திற்கு நிகர் ஏதும் இல்லை. ஆபரேஷன் சிந்தூர் நாட்டின் பாதுகாப்பு மற்றும் ராணுவத்தின் தியாகத்தை போற்றும் வகையில் அமைந்துள்ளது.
இந்தியாவின் சுய பாதுகாப்புக்காக ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை எடுக்கப்பட்டது. வெறும் 22 நிமிடங்களில் 9 பயங்கரவாதிகள் முகாம்கள் நாசம் செய்யப்பட்டன. இதில் ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய அமைப்புகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தான் நம்மை தாக்கியதால், பதிலடி தாக்குதலாக அவர்களது விமானப்படை தளங்களையும், ராணுவ முகாம்களையும் இந்தியா தாக்கி அழித்தது. கடைசியில் இந்தியாவை தொடர்பு கொண்டு பாகிஸ்தான் ராணுவ தலைமை இயக்குனர் சண்டையை நிறுத்த வலியுறுத்தினார்.
ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடிவடையவில்லை. நம் நாட்டின் எல்லைகள் மீது பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தினால் அல்லது பாகிஸ்தான் அரசின் ஆதரவுடன் இயங்கும் தீவிரவாத அமைப்புகள் தாக்குதல் நடத்தினால், நம் நடவடிக்கை தொடரும்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். இது இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் எல்லை பாதுகாப்பு குறித்த உறுதியான நிலைப்பாட்டை பிரதிபலிக்கிறது.