நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம்.., தமிழ்நாட்டில் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பா.?
17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்றைய தினம் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் நடைபெறுகிறது.

சென்னை : இன்று (ஜூலை 9, 2025) இந்தியா முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய ஒரு நாள் பொது வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றன. இந்தப் போராட்டம் மத்திய அரசின் தொழிலாளர் விரோத மற்றும் கார்ப்பரேட் சார்பு கொள்கைகளுக்கு எதிராக நடைபெறுகிறது.
சுமார் 25 கோடி தொழிலாளர்கள் இதில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது, இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படலாம். இதற்கு தமிழ்நாட்டில் தொமுச, சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, ஐ.என்.டி.யு.சி உள்ளிட்ட 13 தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.
திமுகவின் LPF கூட இதில் பங்கேற்கிறது. இருப்பினும், தங்களது எதிர்ப்பை காட்ட ஸ்டிரைக் செய்வோம் என CITU, LPF ஊழியர்கள் திட்டவட்டமாக கூறியுள்ளதால் பஸ், ஆட்டோ சேவைகள் பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது. ஆனால், போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர், பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும் என அறிவித்துள்ளார்.
இதனிடையே, இன்று நடைபெறும் பொது வேலை நிறுத்தப் போராட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றால் சம்பளம் நிறுத்தம் மற்றும் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமைச் செயலாளர் முருகானந்தம் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
அரசுக்கு வைக்கும் கோரிக்கைகள் என்ன?
- மத்திய அரசு 4 தொழிலாளர் சட்ட தொகுப்பை கைவிட வேண்டும்.
- தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.26,000 வழங்க வேண்டும்.
- மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீளமைக்க வேண்டும்.
- பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கக் கூடாது.
- 100 நாள் வேலை திட்டத்தில் தினக்கூலியை ரூ.600 ஆக உயர்த்த வேண்டும்.
- அனைத்து துறைகளிலும் உள்ள தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு மற்றும் நியாயமான ஊதியம் உறுதி செய்யப்பட வேண்டும்.
- வேலைவாய்ப்பு உருவாக்குவதற்கு உரிய நடவடிக்கைகள் தேவை.
- நாளுக்கு நாள் உயர்ந்து வரும் விலைவாசியை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பெட்ரோல், டீசல் கலால் வரியை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 17 கோரிக்கைகளை வலியுறுத்தி பந்த் நடத்துகிறது.