விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் நலம் விசாரித்தார் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்!

ஒடிசாவில் நேற்று இரவு ஏற்பட்ட 3 ரயில்கள் மோதிய விபத்தில் காயமடைந்தவர்களை சந்தித்து நலம் விசாரித்தார் முதல்வர் நவீன் பட்நாயக்.
ஒடிசாவின் பஹானாகா ரயில் நிலையம் அருகே நேற்று இரவு ஷாலிமார்- சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஆகிய 3 ரயில்கள் ஒன்றின் மீது ஒன்று மோதி பெரும் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தற்போது வரை 238 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இந்த விபத்தில் 900க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விபத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்த நடைபெற்றதில் 650க்கும் மேற்பட்டோர் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் விபத்து நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்ட ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக், செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், மிகவும் சோகமான ரயில் விபத்து, இடிபாடுகளில் இருந்து மக்களை காப்பாற்ற உதவியவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
காயமடைந்தவர்களுக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளும் தொடர்ந்து நடைபெற்று வருவதாக ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்தது. இதையடுத்து ரயில் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை காண பாலசோர் மருத்துவமனைக்கு சென்ற முதல்வர் நவீன் பட்நாயக், காயமடைந்தவர்களை சந்தித்து நலம் விசாரித்தார்.