OneNationOneElection: செப். 23ம் தேதி 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' குறித்த முதல் கூட்டம் – ராம்நாத் கோவிந்த் அறிவிப்பு

நாட்டில் நாடாளுமன்ற, சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் வகையில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை கொண்டுவர மத்திய அரசு மும்மரம் காட்டி வருகிறது.

Ram Nath Kovind

நாட்டில் நாடாளுமன்ற, சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் வகையில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை கொண்டுவர மத்திய அரசு மும்மரம் காட்டி வருகிறது. ஆனால், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இதற்கான மசோதாவை வரும் 18ம் தேதி நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தில் நிறைவேற்ற திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய சிறப்பு குழுவை மத்திய அரசு சமீபத்தில் அமைத்தது. அதன்படி, முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு குழுவில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, குலாம் நபி ஆசாத், என்கே சிங், சுபாஷ் காஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே மற்றும் ஊழல் ஒழிப்பு முன்னாள் ஆணையர் சஞ்சய் கோத்தாரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

அதுமட்டுமில்லாமல், குழுவின் கூட்டங்களில் மத்திய சட்ட அமைச்சர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்பார் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஒரே நேரத்தில் சட்டமன்ற தேர்தல் மற்றும் நாடாளுமன்ற மக்களவைக்கு தேர்தல் நடத்துவது சாத்தியமா என்பது குறித்து ஆய்வு செய்ய சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து முடிவெடுக்கும் என கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழுவின் முதல் கூட்டம் செப். 23ம் தேதி நடைபெறும் என்று குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் குறித்த நடவடிக்கை மேற்கொள்வது பற்றி ஆலோசிக்கப்பட உள்ளதாகவும், இந்த திட்டம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.