பெங்களூருவில் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படுகொலை விவகாரத்தில் நாய் இறந்தால் கூட பிரதமர் மோடி கருத்து தெரிவிக்க வேண்டுமா என இந்துத்வா அமைப்பின் தலைவரான ப்ரமோத் முத்தலிக் (Parmod Muthalik) கேள்வி எழுப்பியிருப்பது சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
இந்துத்வாவுக்கு எதிராக குரல் கொடுத்துவந்ததாகக் கூறப்படும் கவுரி லங்கேஷ் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதி பெங்களூரில் உள்ள தனது வீட்டருகே சுட்டுக்கொல்லப்பட்டார். இது தொடர்பாக பிரதமர் மோடி கருத்து தெரிவிக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவருகின்றன. இந்நிலையில் பெங்களூருவில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ஸ்ரீராம் சேனா தலைவர் பிரமோத் முத்தலீக், நாய் இறந்தால் கூட பிரதமர் கருத்து தெரிவிக்க வேண்டுமா என கேள்வி எழுப்பினார்.
கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் அண்மையில் கைது செய்யப்பட்ட பரசுராம் வாக்மோர் தன்னுடன் இருக்கும் புகைப்படம் வெளியான போது முதலில் அவனைத் தெரியும் என ஒப்புக்கொண்ட முத்தலிக் பின்னர் பரசுராமைத் தெரியாது என்றும் அவனுக்கும் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் கூறியுள்ளார்.