மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இடையே மாநிலங்களவையில் வாக்குவாதம்.
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்கவையில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். மணிப்பூர் வன்முறை குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச வேண்டும் என வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மணிப்பூர் விவகாரம் குறித்து அவையில் பேசுவார். ராஜஸ்தான், மேற்குவங்கம், சத்தீஸ்கரில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து பேச வேண்டும் எனவும் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
இதன்பின் பேசிய காங்கிரஸ் தலைவர் கார்கே, மணிப்பூர் விவகாரம் குறித்து 267வது விதியின்கீழ் விவாதிக்க பல உறுப்பினர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். நாங்கள் மணிப்பூர் பிரச்னை குறித்து பேசுகிறோம், ஆனால், பிரதமர் மோடி கிழக்கிந்திய கம்பெனி பற்றி பேசுகிறார் என விமர்சித்தார். இதனால் மாநிலங்களவையில் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
