டெல்லி :செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் பெரிய சதித்திட்டம் இருந்தது உளவுத்துறை விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தலா 2 பேர் கொண்ட 4 குழுக்களாகப் பிரிந்து இந்தியாவின் 4 முக்கிய நகரங்களில் தொடர் குண்டுவெடிப்பு நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. இந்தக் குழுக்கள் டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா போன்ற நகரங்களை இலக்காகக் கொண்டிருந்தன என்று என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், வெடிப்பு நடத்திய காரை ஓட்டியவர் காஷ்மீரைச் சேர்ந்த மருத்துவர் முகமது உமர் நபி என்பது டிஎன்ஏ பரிசோதனையில் முழுமையாக உறுதி செய்யப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் சிதறிய உடல் பாகங்களுடன் ஒப்பிடப்பட்ட டிஎன்ஏ மாதிரி பொருந்தியதால், உமர் நபியே வெடிப்பில் உயிரிழந்தவர் என்று உறுதியானது. அவர் தலைமறைவாக இருந்த நிலையில், இந்தப் பரிசோதனை விசாரணையில் பெரிய திருப்பமாக அமைந்துள்ளது.
இந்தச் சதித்திட்டத்தில் ஈடுபட்ட மற்ற சந்தேக நபர்களின் செல்போன் தரவுகள், சிசிடிவி காட்சிகள் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டதில், 4 குழுக்கள் தனித்தனியே செயல்படத் திட்டமிடப்பட்டது தெரியவந்துள்ளது. ஹரியானாவில் பறிமுதல் செய்யப்பட்ட 3,000 கிலோ வெடிபொருட்கள் இந்தத் திட்டத்துடன் தொடர்புடையவை என்றும் சந்தேகிக்கப்படுகிறது. வெடிப்புக்கு டெட்டனேட்டர், அமோனியம் நைட்ரேட் பயன்படுத்தப்பட்டது உறுதியான நிலையில், இது திட்டமிட்ட பயங்கரவாதச் செயலாகவே கருதப்படுகிறது.
கைது செய்யப்பட்ட மருத்துவர்கள் உள்ளிட்ட சந்தேக நபர்கள் அல்-பலாஹ் மருத்துவக் கல்லூரியுடன் தொடர்புடையவர்கள் என்பது விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. வெளிநாட்டுத் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. என்ஐஏ, என்எஸ்ஜி உள்ளிட்ட அமைப்புகள் காஷ்மீர், ஹரியானா, டெல்லி உள்ளிட்ட இடங்களில் தீவிர சோதனை நடத்தி வருகின்றன. மேலும் கைதுகள் நடக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.இந்தப் பகீர் தகவல்கள் டெல்லி வெடிப்பு சம்பவம் ஒரு தனி நிகழ்வு அல்ல, பெரிய சதித்திட்டத்தின் ஒரு பகுதி என்று உறுதிப்படுத்தியுள்ளன. உள்துறை அமைச்சர் அமித் ஷா “குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது” என்று உறுதி அளித்துள்ளார். விசாரணை முடிவுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தலைநகர் பாதுகாப்பு குறித்து பெரிய கேள்வி எழுந்துள்ளது.
