போபால்: முன்னாள் மாடல் மற்றும் நடிகையான ட்விஷா சர்மா, போபாலில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்துகொண்ட வழக்கில், அவரது மாமியாரும் முன்னாள் மாவட்ட நீதிபதியுமான கிரிபாலா சிங்கிற்கு வழங்கப்பட்ட முன் ஜாமீனை (Anticipatory Bail) ரத்து செய்யக் கோரி காவல்துறை தீவிரம் காட்டி வருகிறது.
விசாரணையில் ஒத்துழைக்காத மாமியார்
கிரிபாலா சிங், இந்த வழக்கின் விசாரணையில் முறையாக ஒத்துழைக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ள போபால் காவல்துறை, அவருக்கு "மூன்றாவது மற்றும் இறுதி நோட்டீஸ்" அனுப்பியுள்ளது. விசாரணையின் போது தன் தரப்பு வாக்குமூலத்தை பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து அவர் ஒத்துழைக்கத் தவறினால், நீதிமன்றத்தை நாடி அவருக்கு வழங்கப்பட்ட முன் ஜாமீனை ரத்து செய்யப் போவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை
முன்னாள் நீதிபதியான கிரிபாலா சிங், போபால் மாவட்ட நுகர்வோர் ஆணையத்தின் தலைவராகப் பணியாற்றி வருகிறார். ஒரு குற்ற வழக்கில் விசாரணை வளையத்தில் உள்ள நபர், இது போன்ற முக்கிய பொறுப்பில் தொடர்ந்து நீடிக்கலாமா என்பது குறித்து, மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்திடம் மத்தியப் பிரதேச அரசு விளக்கம் கோரியுள்ளது.
உயர்நீதிமன்றத்தில் வரிசைகட்டும் மனுக்கள்
இந்த வழக்கு தற்போது மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றத்தை எட்டியுள்ளது. விடுமுறைக்கால அமர்வில் (Vacation Bench) இந்த வழக்கு தொடர்பான பல்வேறு மனுக்கள் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வரவுள்ளன.
தலைமறைவாக இருக்கும் ட்விஷாவின் கணவர் சமர்த் சிங், ஜபல்பூர் உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார் (முன்னதாக கீழ் நீதிமன்றம் இவருடைய ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்திருந்தது).அதே நேரத்தில், ட்விஷாவின் தந்தை நவநிதி சர்மா, மாமியார் கிரிபாலா சிங்கிற்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
தனது வீட்டிலிருந்த சிசிடிவி கேமராக்கள் மற்றும் டி.வி.ஆர் (DVR) பதிவுகளைக் கையாள்வதில் காவல்துறை முறைகேடு செய்துள்ளதாகக் குற்றம் சாட்டி, கிரிபாலா சிங் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
சிசிடிவி பதிவுகளில் நேரக் கணக்கு (Timestamp) மாறி இருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், இதனைத் தீர்க்க சுயேச்சையான சாட்சிகள் முன்னிலையில் ஆதாரங்களைப் பதிவு செய்யுமாறு கோரியுள்ளார். மேலும், தனது குடும்பத்தினர் மீது அவதூறு பரப்ப சில வாட்ஸ்அப் உரையாடல்கள் திரிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
வழக்கின் பின்னணி
நொய்டாவைச் சேர்ந்த நடிகை ட்விஷா சர்மா, கடந்த மே 12-ம் தேதி போபாலில் உள்ள தனது கணவர் வீட்டில் உயிரிழந்தார். வரதட்சணைக் கொடுமை மற்றும் தற்கொலைக்குத் தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் (பாரதிய நியாய சன்ஹிதா 80(2), 85, 3(5) மற்றும் வரதட்சணை தடுப்புச் சட்டம்) சமர்த் சிங் மற்றும் கிரிபாலா சிங் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தலைமறைவாக உள்ள சமர்த் சிங்கைப் பிடிக்க காவல்துறை சன்மானம் அறிவித்துள்ளதுடன், அவரது பாஸ்போர்ட்டை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
