சிவசேனா-பாஜக கூட்டணியில் இணைந்த அஜித் பவார் உள்பட 9 போரையும் தாக்கு நீக்கம் செய்யக்கோரி என்சிபி மனு தாக்கல்.
மகாராஷ்டிரா அரசியலில் அடுத்தடுத்து புதிய திருப்பங்கள் நடந்து வருகிறது. இதில், பெரும் திருப்பமாக, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் மற்றும் மற்ற தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) கட்சியின் 8 எம்.எல்.ஏக்கள் ஆளும் சிவசேனா மற்றும் பாஜக கூட்டணியில் நேற்று இணைந்தனர். சிவசேனா மற்றும் பாஜக கூட்டணியில் இணைந்த அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றுக்கொண்டார்.
அஜித் பவாருடன் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 8 பேரும் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர். சரத் பவார் தனுடைய மகளை கட்சியின் செயல் தலைவராக நியமித்த அடுத்த சில நாட்களில், அஜித் பவார் கட்சியில் இருந்து பிறந்து பா.ஜ.க-வுடன் சேர்ந்து துணை முதல்வராகியிருக்கிறார்.
அரசியல் வட்டாரத்தில் இது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதுகுறித்து என்சிபி யின் தலைவர் சரத் பவார் கூறுகையில், எனது கட்சி உடைந்ததாக நான் கூறமாட்டேன், இந்த பிரச்சினை எனக்கு மட்டுமல்ல, மக்களின் பிரச்சினையும் கூட. வெளியேறியவர்களின் எதிர்காலம் குறித்து கவலைப்படுவதாகவும், இதற்கான பெருமை பிரதமர் மோடிக்கே சேரும் என தெரிவித்திருந்தார்.
பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் முயற்சி செய்து வரும் நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து முக்கிய தலைவர்கள் பாஜகவுக்கு தாவியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், என்சிபியின் அஜித் பவார் மற்றும் மற்ற 8 கட்சி தலைவர்கள் மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா-பாஜக கூட்டணியில் இணைந்த பிறகு, அக்கட்சி அதன் 9 பேருக்கு எதிராக சட்டமன்ற சபாநாயகர் ராகுல் நர்வேக்கரிடம் தகுதி நீக்க மனு அளித்துள்ளனர்.
அதாவது, பாஜக கூட்டணி அமைச்சரவையில் இணைந்த அஜித் பவார் உள்ளிட்ட 9 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யகோரி தேசியவாத காங்கிரஸ் கட்சி மகாராஷ்டிர சட்டப்பேரவை சபாநாயகர் நர்வேக்கரிடம் மனு அளித்துள்ளது. இதுதொடர்பாக என்சிபி மாநில கட்சி தலைவர் ஜெயந்த் பாட்டீல் கூறுகையில், என்சிபிக்கு எதிராக கட்சியை விட்டு விலகுவதாக 9 பேரும் யாருக்கும் தகவல் தெரிவிக்கவில்லை. இந்திய தேர்தல் ஆணையத்துக்கும் கடிதம் எழுதியுள்ளோம்.
மேலும், இதை நாங்கள் ஏற்கவில்லை, நாங்கள் சட்டசபை சபாநாயகரிடம் தகுதி நீக்க மனு தாக்கல் செய்துள்ளோம், விரைவில் நகல்களை அனுப்புவோம். பெரும்பாலான எம்எல்ஏக்கள் மீண்டும் என்சிபிக்கு வருவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம், நாங்கள் அவர்களை மீண்டும் ஏற்றுக்கொள்வோம் எனவும் தெரிவித்துள்ளார்.
