ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு விசாரணை, அடுத்த ஆகஸ்ட் 4 ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைப்பு.
மோடி பெயர் குறித்த சர்ச்சை கருத்து தொடர்பான அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறைதண்டனை மற்றும் எம்.பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அதனை எதிர்த்து ராகுல் காந்தி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்நிலையில் இந்த மனுவுக்கு பதிலளிக்க எதிர் மனுதாரருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ராகுல் காந்தி, தனக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை நிறுத்திவைக்க வேண்டும் என தொடரப்பட்ட மனு மீது குஜராத் அரசும், பூர்னேஷ் மோடிக்கும் 10 நாட்களுக்குள் விளக்கம் தரவேண்டும் என உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் இந்த வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 4 ஆம் தேதிக்கும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த வழக்கில் ராகுல் சார்பாக, தன் வயநாடு தொகுதியில் 110 நாட்களாக தன்னால் மக்கள் பணி செய்யமுடியாமல் இருப்பதாகவும் வாதம் முன்வைக்கப்பட்டது. வழக்கு விசாரணை நடைபெற்று வந்தாலும் தண்டனையை நிறுத்திவைக்கவும் கோரப்பட்டது. தற்போது நடந்து வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க முடியாமல் இருப்பதையும் சுட்டிக்காட்டி வாதிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
