அவசரச்சட்டத்துக்கு எதிராக டெல்லி அரசு தொடர்ந்த வழக்கில், மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
டெல்லியில் துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் வழங்கும் வகையில், மத்திய அரசு கொண்டுவந்த அவசர சட்டத்திற்கு எதிராக, டெல்லி அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. டெல்லியின் ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) அரசாங்கம், மத்திய அரசு கொண்டு வந்த அவசர சட்டம் அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணான செயல்பாடு என்று கூறியிருந்தது.
மேலும் உச்ச நீதிமன்றம் மற்றும் அரசியலமைப்பின் அடிப்படைக் கோட்பாடுகள் இரண்டையும் மீறுவதை நோக்கமாக இந்த அவசர சட்டம் கொண்டுள்ளது என்றும் கூறி டெல்லி அரசு மனு தாக்கல் செய்தது. இதற்கு இடைக்காலத் தடை விதிக்குமாறும் டெல்லி அரசு மனுவில் கோரியுள்ளது. டெல்லி அரசு தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும் வகையில், உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்திய தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு, அவசரச் சட்டம் நடைமுறையில் இருப்பதால் அதற்கு தடை விதிக்கமுடியாது என்றும், இந்த விஷயத்தை முதலில் விசாரிக்க வேண்டும் என்று கூறியது. மேலும் மத்திய அரசுக்கு முதலில் நோட்டீஸ் அனுப்புவோம் என்று கூறி, வழக்கை ஜூலை 17 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் என கூறியது.
