வங்கதேசத்தில் உள்ள அகதிகள் முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில் 12,000 பேர் வீடுகளை இழந்துள்ளனர்.
வங்கதேசத்தின் குடுபலோங்கில் (Kutupalong refugee camp) உள்ள ரோஹிங்கியா அகதிகள் முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 12,000 பேர் வீடுகளை இழந்துள்ளனர். உலகின் மிகப் பெரிய அகதிகள் குடியிருப்புகளில் ஒன்றான ரோஹிங்கியா அகதிகள் முகாமில் உள்ள முகாம் எண் 11 இல் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து முகாம் முழுவதும் தீ பரவியதால் 2,000 தங்குமிடங்கள் தீயில் எரிந்து நாசமானது.
அதில் குறைந்தது 5 மசூதிகள் மற்றும் அகதிகளுக்கான 21 கற்றல் மையங்கள் அடங்கும். இந்த விபத்துக்குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக முயற்சி செய்த பின்னர் தீயணைப்பு துறையினர் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீ விபத்து ஏற்பட்டது குறித்த காரணம் தெரியவில்லை என்றும் இந்த விபத்தில் எத்தகைய உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் மீட்புத்துறைனர் தெரிவித்தனர். மார்ச் 2021 இல், ரோஹிங்கியா முகாம்களில் ஏற்பட்ட மிக மோசமான தீ விபத்தில், ஒரு குடியேற்றத்தின் முழுப்பகுதியும் தீயில் எரிந்ததால், குறைந்தது 15 பேர் உயிரிழந்ததோடு, சுமார் 50,000 பேர் இடம்பெயர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.