ராகுல்காந்தி மேல்முறையீடு மனு.! உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை.!

அவதூறு வழக்கு குறித்த ராகுல்காந்தி தாக்கல் செய்திருந்த மேல்முறையீடு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது.
2019 நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் கர்நாடகவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பிரச்சாரம் செய்கையில் மோடி பெயர் குறித்து சர்ச்சைகுரிய வகையில் கருத்து தெரிவித்ததாக கூறி அவர் மீது குஜராத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. குஜராத் சூரத் நீதிமன்றம் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதனால் ராகுல் காந்தி தனது எம்பி பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.
சூரத் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அங்கு இவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தொடர்ந்து இருந்தார். அங்கும் ராகுல்காந்தி மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் 2 ஆண்டுகள் தண்டனையை நிறுத்தி வைக்கவும் உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இதனால் , தனது 2 ஆண்டுகள் சிறை தண்டனை தீர்ப்பை எதிர்த்து டெல்லி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க ராகுல்காந்தி கோரிக்கை வைத்து இருந்தார். இந்நிலையில் இன்று ராகுல்காந்தி மேல்முறையீட்டு வழக்கானது உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.