ஜூலை மாதத்தில் பசுமை ஹைட்ரஜன் குறித்த 3 நாள் உலகளாவிய மாநாட்டை இந்தியா நடத்த இருக்கிறது.
வரும் ஜூலை 5 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை 3 நாட்கள் பசுமை ஹைட்ரஜன் குறித்த சர்வதேச மாநாட்டை, டெல்லியில் நடத்த மத்திய அரசு ஏற்பாடு செய்கிறது. பசுமை ஹைட்ரஜன் சர்வதேச மாநாடு, விக்யான் பவனில் நடைபெறும் என வெளியான அறிவிப்பில், ஒட்டுமொத்த பசுமை ஹைட்ரஜன் துறையில் சமீபத்திய முன்னேற்றங்கள் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.
இந்த மாநாடு, இத்துறையின் பங்குதாரர்களுக்கு வளர்ந்து வரும் பசுமையான ஹைட்ரஜன் மற்றும் புதுமை சார்ந்த பல தீர்வுகளை ஆராய உதவும் என்று புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஹைட்ரஜன் உற்பத்தி, சேமிப்பு, விநியோகம் குறித்த ஆராய்ச்சிகள் விவாதிப்பதுடன், பசுமைக்கு நிதியளிப்பது, மனிதவள மேம்பாடு மற்றும் பசுமைக்கான ஆரம்பகட்ட முயற்சிகள் குறித்தும் மாநாட்டில் விவாதிக்கப்படும்.
பசுமை ஹைட்ரஜன் பணியானது, படிப்படியாக தொழில்துறை, போக்குவரத்து மற்றும் எரிசக்தி துறைகளின் புதைப்படிம எரிபொருள் சார்பைக் குறைக்கும். இதனால் இந்த பசுமை ஹைட்ரஜன் மூலம், எரிபொருள் இறக்குமதியை குறைக்கும் வழியாகக் கருதப்படுகிறது.
