அரசு விழாவில் முதல்வர் அசோக் கெலாட் பேச்சுக்கு அனுமதியில்லையா.? பிரதமர் அலுவலகம் மறுப்பு.!

Rajastan CM Ashok gehlot - PM Modi

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கூறிய தகவலுக்கு பிரதமர் அலுவலகம் மறுப்பு தெரிவித்தது. 

ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக அசோக் கெலாட் பொறுப்பு வகித்து வருகிறார். இன்று பிரதமர் மோடி ராஜஸ்தான் மாநிலம் சிகார்கிற்கு வருகை புரிந்து 5 புதிய மருத்துவ கல்லூரிகளை திறக்க உள்ளார். 7 புதிய கல்லூரிகளுக்கு அடிக்கல் நட்டுகிறார் மேலும். விவசாயிகளுக்கு நல திட்டங்கள் துவங்கி வைக்கிறார்.

ராஜஸ்தானுக்கு பிரதமர் வருகை குறித்து ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் தனது டிவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடியை குறிப்பிட்டு ஓர் கடிதத்தை எழுதியுள்ளார். அதில், பிரதமர் மோடி , இன்று நீங்கள் ராஜஸ்தானுக்குச் வரவுள்ளீர்கள். உங்கள் அலுவலகம் எனது பேச்சுக்கான அட்டவணையை  திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரலில் இருந்து நீக்கியுள்ளது. எனவே உங்களை எனது பேச்சின் மூலம் வரவேற்க முடியாது என்பதால், இந்த ட்வீட்டர் செய்தி மூலம் உங்களை ராஜஸ்தானுக்கு மனதார வரவேற்கிறேன்.

ராஜஸ்தான் அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையேயான கூட்டு முயற்சியின் விளைவாக 12 மருத்துவக் கல்லூரிகளின் திறப்பு விழா மற்றும் அடிக்கல் நாட்டும் விழா இன்று நடைபெறுகிறது. இந்த மருத்துவக் கல்லூரிகளின் திட்டச் செலவு ரூ.3,689 கோடி, இதில் ரூ.2,213 கோடி மத்திய அரசின் பங்கும், ரூ.1,476 கோடி மாநில அரசின் பங்கும் ஆகும். இந்த மருத்துவ கல்லூரி தொடர்பாக அனைவருக்கும் மாநில அரசு சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நிகழ்ச்சியில் எனது உரையின் மூலம் நான் முன்வைத்த கோரிக்கைகளை இந்த ட்வீட் மூலம் முன் வைக்கிறேன். 6 மாதங்களில் 7வது முறையாக ராஜஸ்தான் வருகிறீர்கள். என குறிப்பிட்டு தனது கோரிக்கைகளை குறிப்பிட்டார். அதில்,

1. ராஜஸ்தான் இளைஞர்களின் கோரிக்கையின் பேரில், அக்னிவீர் திட்டத்தை வாபஸ் பெற்று, ராணுவத்தில் நிரந்தர ஆள்சேர்ப்பை முன்பு போல் தொடர வேண்டும்.

2. மாநில அரசு அதன் கீழ் உள்ள அனைத்து கூட்டுறவு வங்கிகளிலும் 21 லட்சம் விவசாயிகளின் 15,000 கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்துள்ளது. தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் கடனை தள்ளுபடி செய்ய மத்திய அரசுக்கு ஒருமுறை தீர்வுத் திட்டம் அனுப்பியுள்ளோம். இந்தக் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.

3. ஜாதிவாரி கணக்கெடுப்புக்கான தீர்மானத்தை ராஜஸ்தான் சட்டமன்றம் நிறைவேற்றியுள்ளது. மத்திய அரசு காலதாமதமின்றி இதில் முடிவெடுக்க வேண்டும்.

4. என்எம்சியின் வழிகாட்டுதல்களால், நமது மூன்று மாவட்டங்களில் திறக்கப்படும் மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசின் நிதி உதவி எதுவும் கிடைக்கவில்லை. இவை முழுக்க முழுக்க மாநில அரசின் நிதியுதவியில் கட்டப்படுகின்றன. பழங்குடியினர் அதிகம் வசிக்கும் இந்த மூன்று மாவட்டங்களிலும் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசு 60% நிதியுதவி அளிக்க வேண்டும்.

5. கிழக்கு ராஜஸ்தான் கால்வாய் திட்டத்திற்கு (ERCP) தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டத்தின் அந்தஸ்து வழங்கப்பட வேண்டும்.

இந்த கோரிக்கைகளை நிறைவேற்றித்தர உறுதியளிக்குமாறு பிரதமர் மோடியை கேட்டுக்கொள்கிறேன். என தனது டிவிட்டரில் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட் குறிப்பிட்டு இருந்தார்.

இதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக பிரதமர் அலுவலகம் தனது டிவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், அரசு நெறிமுறையின்படி, நீங்கள் (முதலமைச்சர் அசோக் கெலாட்) முறையாக அழைக்கப்பட்டீர்கள், உங்களுக்கான பேச்சு நேரமும் ஒதுக்கப்பட்டது. ஆனால், உங்களால் அதில் கலந்து கொள்ள முடியாது என்று உங்கள் அலுவலகம் தான் கூறியது.

பிரதமர் நரேந்திர மோடி இதற்கு முன்னர் வந்த போதும்,  நீங்கள் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள், மேலும் அந்த அழைப்பை ஏற்று நீங்கள்  நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டீர்கள்.

இன்றைய நிகழ்வில் கலந்துகொள்ள உங்களை வரவேற்கிறோம். வளர்ச்சிப் பணிகளின் பலகையிலும் உங்கள் பெயர் உள்ளது. நீங்கள் கலந்துகொள்ள எந்தவித அசௌகரியமும் இல்லை என்றால் உங்களுக்கான வரவேற்பு எப்போதும் போல் இருக்கும். என டிவிட்டரில் பிரதமர் அலுவலகம் சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்