கேரளம் : கேரளாவில் வெள்ளத்தில் சிக்கிய முதியவரைக் காப்பாற்ற தனது சொந்த 'லைஃப் ஜாக்கெட்' (Life Jacket)-ஐக் கொடுத்துவிட்டு தன் உயிரைத் தியாகம் செய்த நீச்சல் வீரர் ராஜேஷின் மறைவு ஒட்டுமொத்த நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கண்ணூர் மாவட்டம் மீந்துள்ளி தீவுப் பகுதியில் (கரியங்கோட்டு ஆறு) பெருக்கெடுத்த வெள்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்ட பென்னி (61) என்ற முதியவரைக் காப்பாற்றும் பணியில் நீச்சல் மற்றும் மீட்புப் பயிற்சி பயிற்றுநரான ராஜேஷ் ஈடுப்பட்டார். முதியவரை பத்திரமாக மீட்டுக் கரை சேர்த்துக்கொண்டிருக்கும்போதே திடீரென ஆக்ரோஷமாகப் பாய்ந்த வெள்ளச் சுழலில் அவர் சிக்கிக் கொண்டார். தான் அணிந்திருந்த 'லைஃப் ஜாக்கெட்'டை மீட்கப்பட்ட முதியவருக்கு அணிவித்துவிட்டு, தன் உயிரைப் பொருட்படுத்தாமல் மனிதாபிமானத்தின் உச்சத்தை வெளிப்படுத்திய ராஜேஷின் உடல் கடந்த செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.
திருவனந்தபுரம் கல்லியூர் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ், வெறும் நீச்சல் வீரர் மட்டுமல்லாமல், கடந்த 2018-ஆம் ஆண்டு ஏற்பட்ட பேரழிவான கேரளா வெள்ளம், 2024 வயநாடு நிலச்சரிவு மற்றும் தற்போதைய 2026 வெள்ளப் பேரிடர் என எப்போதெல்லாம் கேரளா துயரத்தைச் சந்தித்ததோ, அப்போதெல்லாம் தன் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் முன்வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்ட ஒரு உண்மையான மனிதநேய மாவீரன் ஆவார்.
அவரது இந்த ஈடு இணையற்ற தியாகத்திற்குப் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களையும் வீரவணக்கத்தையும் தெரிவித்து வருகின்றனர்.
கேரள முதலமைச்சர் வி.டி. சதீசன்: "கண்ணூர் புலிங்கோம் பகுதியில் தத்தளித்தவரைக் காப்பாற்றத் தனது சொந்த லைஃப் ஜாக்கெட்டைத் தந்து தன் உயிரைத் தியாகம் செய்துள்ளார் ராஜேஷ். அவரது இறுதித் தியாகமும், மனிதநேயமும் எ என்றும் நினைவில் நிலைத்திருக்கும். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்" என்று தனது 'எக்ஸ்' பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
பாஜக மாநிலத் தலைவர் ராஜீவ் சந்திரசேகர்: "கேரளாவிற்கு எப்போதெல்லாம் உதவி தேவையோ, அப்போதெல்லாம் கடமையுணர்ச்சியுடன் ஓடோடி வந்த மீட்பு வீரர் ராஜேஷ். 2018, 2024 மற்றும் இன்றைய 2026 பேரிடர்களில் அவர் காட்டிய வீரமும் தன்னலமற்ற தியாகமும் கேரள வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும். அவரது மனைவி லெட்சுமி, மகன்கள் அர்ஷான், அபிஷேக் மற்றும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
