குறித்த நேரத்திற்கு முன்னதாக புறப்பட்ட சிங்கப்பூர் விமானம்.! குழப்பத்தில் அதிகாரிகள்.!

அமிர்தசரஸ்-சிங்கப்பூர் விமானம் திட்டமிட்ட நேரத்திற்கு முன்னதாகவே புறப்பட்டுச் சென்று குழப்பத்தை ஏற்படுத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அமிர்தசரஸ்-சிங்கப்பூர் விமானம் திட்டமிட்ட நேரத்திற்கு முன்னதாகவே புறப்பட்டுச் சென்று குழப்பத்தை ஏற்படுத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அமிர்தசரஸிலிருந்து சிங்கப்பூர் செல்லும் ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமானம் குறிப்பிட்ட நேரத்திற்கு பலமணி நேரம் முன்னதாகவே புறப்பட்டுள்ளது. ஸ்கூட் ஏர்லைன் விமானம் இரவு 7 மணி அளவில் புறப்படத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அது மாலை 3 மணிக்கே புறப்பட்டுவிட்டது.

இதனால் விமானத்தை தவறவிட்ட 30 க்கும் மேற்பட்ட பயணிகள் விமான நிலையத்திலேயே விடப்பட்டனர். பயணிகளை விமான நிலையத்திலேயே விட்டுச் சென்றதால் அதிகாரிகள் மற்றும் பயணிகள் அனைவரும் குழப்பமடைந்தனர்.

இச்சம்பவம் குறித்து விமான நிறுவனம் கூறுகையில், விமான நேர மாற்றம் குறித்து பயணிகளுக்கு முன்கூட்டியே மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்பட்டதாக கூறியது. மேலும் இந்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) இச்சம்பவம் குறித்து விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளது.