உத்தரப்பிரதேசம் : சூறைக்காற்று கனமழையால் 111 பேர் பலி!

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் ஏற்பட்ட கடுமையான புயலில் 111 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படடுத்தியுள்ளது.

Hero Image

உத்தரப்பிரதேசம் : மாநிலத்தில் 26 மாவட்டங்களில் கடந்த 13 மற்றும் 14ஆம் தேதிகளில் ஏற்பட்ட கடும் புயல் மற்றும் கனமழை வீச்சில் குறைந்தது 111 பேர் உயிரிழந்துள்ளனர். 72 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று மாநில நிவாரண ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளது.இந்தப் புயலால் 227 வீடுகள் முற்றிலுமாகச் சேதமடைந்துள்ளன. 170 கால்நடைகள் உயிரிழந்துள்ளன.

புயலின் வேகம் மணிக்கு 74 முதல் 130 கிலோமீட்டர் வரை இருந்ததாகவும், பரேலி மற்றும் பிரயாக்ராஜ் மாவட்டங்களில் அதிகபட்ச வேகம் பதிவாகியுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் பகுதியில் உள்ள மேற்கத்திய சுழற்சி மற்றும் மத்திய உத்தரப்பிரதேசத்தில் உள்ள சுழற்சி மண்டலம் காரணமாக இந்தக் கடும் புயல் ஏற்பட்டதாக வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மாலை நேரத்தில் சந்தைகள் மற்றும் வெளிப்பகுதிகளில் மக்கள் அதிகம் இருந்தபோது புயல் வீசியதால் உயிரிழப்பு அதிகரித்தது.

மாவட்ட வாரியாக உயிரிழப்பு

  • பிரயாக்ராஜ் - 21
  • மிர்சாபூர் - 19
  • சாந்த் ரவிதாஸ் நகர் - 16
  • ஃபத்தேபூர் - 11

பிற மாவட்டங்களான பராபங்கி, பஹ்ராயிச், கான்பூர் தேவாத், பாஸ்தி, சம்பல், ஹர்தோய், உன்னாவ் உள்ளிட்ட பகுதிகளிலும் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மாநில நிவாரண ஆணையர் அலுவலகம் மாவட்ட ஆட்சியர்களுடன் தொடர்ந்து ஒருங்கிணைப்புப் பணியில் ஈடுபட்டுள்ளது.இந்தப் புயலுக்கு முன்பாகவே மக்களுக்கு 346 மில்லியன் எச்சரிக்கை செய்திகள் அனுப்பப்பட்டிருந்தன. இருப்பினும், புயலின் தீவிரம் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருந்தது.

சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், “பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணம், இலவச சிகிச்சை, உணவு, தண்ணீர் மற்றும் தற்காலிக இடம் ஆகியவை உடனடியாக ஏற்பாடு செய்யப்பட வேண்டும்” என மாநில அரசை வலியுறுத்தியுள்ளார்.உத்தரப்பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள இந்த இயற்கைப் பேரழிவு மாநிலம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.