மணிப்பூர் வன்முறை! உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி.. டிஜிபிக்கு அதிரடி உத்தரவு!

மணிப்பூர் வன்முறை மற்றும் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரம் தொடர்பாக வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, மணிப்பூர் வன்முறை சம்பவங்கள்

Manipur FIR

மணிப்பூர் வன்முறை மற்றும் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரம் தொடர்பாக வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, மணிப்பூர் வன்முறை சம்பவங்கள் தொடர்பாக மத்திய, மாநில அரசு மீது உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தியை தெரிவித்தது. உச்சநீதிமன்ற நீதிபதி கூறுகையில், மணிப்பூர் வன்முறை தொடர்பாக விசாரணை எதுவும் முழுமையாக நடைபெற்றதாக தெரியவில்லை.

முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய அதிக தாமதம் ஏற்பட்டுள்ளது, கைது நடவடிக்கை எதும் எடுக்கப்படவில்லை. வாக்குமூலங்கள் பதிவு கூட இன்னும் முடியவில்லை என அதிருப்தி தெரிவித்தனர். மணிப்பூர் மாநிலத்தில் எந்த சட்டம் ஒழுங்கும் இல்லை என உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார். மணிப்பூர் காவல் துறையினர் விசாரணை செய்ய முடியாத நிலையில் உள்ளனர். அவர்கள் கட்டுப்பாட்டை முழுமையாக இழந்துவிட்டனர்.

மணிப்பூர் மாநிலத்தில் எந்த சட்ட ஒழுங்கும் இல்லை. மணிப்பூர் மாநிலத்தின் டிஜிபி என்ன செய்து கொண்டிருக்கிறார். ஆதரவு கேட்டு வந்த பெண்களை காவல்துறையினரே வன்முறை கும்பலிடம் ஒப்படைத்து இருக்கிறார்கள். அந்த காவல்துறையினரை டிஜிபி விசாரித்தாரா? மணிப்பூரில் முதல் தகவல் அறிக்கை எப்போது பதிவு செய்யப்பட்டது. மணிப்பூர் அரசு செயலிழந்த நிலையில் உள்ளதா? என தலைமை நீதிபதி அடுக்கடுக்கான கேள்வியை எழுப்பினார்.

மேலும், மணிப்பூரில் வன்முறை நீடிக்கும் நிலையில் 2 மாதங்களாக அரசு அலட்சியமாக செயல்பட்டுள்ளது. அரசால் மக்களை காப்பாற்ற இயலாவிட்டால் மக்கள் எங்கு செல்வார்கள்? கேள்வி எழுப்பி, வன்முறை தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் நிலையில் மணிப்பூர் காவல்துறை இல்லை என தெரிவித்த நீதிபதிகள், மணிப்பூர் சட்டம் – ஒழுங்கு பிரச்சனை தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் டிஜிபி விளக்கம் தர வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

காவல்துறையே முறையாக விசாரிக்காத நிலையில், சிபிஐ எவ்வாறு வாக்குமூலம் பதிவு செய்யும்? என்றும் சிபிஐ இரண்டு எம்.ஐ.ஆர்.களை எடுத்துள்ள நிலையில், மீதமுள்ள எம்.ஐ.ஆர்.களை காவல்துறை எவ்வாறு விசாரிக்கும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர். இதனிடையே மணிப்பூர் அரசு கூறுகையில், மணிப்பூர் வன்முறை தொடர்பாக இதுவரை 6,532 முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

5101 தீ வைப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, 1274 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 6,532 முதல் தகவல் அறிக்கையில் 11 எஃப்.ஐ.ஆர்.கள் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்புடையவை. மேலும், மணிப்பூர் வன்முறை 150 பேர் உயிரிழந்த்துள்ளனர், 502 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் கூறியுள்ளது.

கொலை, பலாத்காரம், தீவைப்பு, சொத்துகள் சேதம் வழக்குகளில் எத்தனை எஃப்.ஐ.ஆர்.கள் உள்ளன என்பதை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்றும் பெரும்பாலான எஃப்.ஐ.ஆர்.களில் எந்த கைதும் செய்யப்படவில்லை எனவும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.

இதன்பின்னர், மணிப்பூர் வன்முறை தொடர்பான வழக்கு ஆகஸ்ட் 7ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம். இந்த வழக்கை திங்கள்கிழமை (ஆகஸ்ட் 7ஆம் தேதி) வைக்க வேண்டும் என்று சொலிசிட்டர் ஜெனரலின் கோரிக்கையின் பேரில், வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், மணிப்பூர் டிஜிபி திங்கட்கிழமை (ஆக.7) ஆஜராக உத்தரவிட்டது.

மணிப்பூர் டிஜிபி தனிப்பட்ட முறையில் நீதிமன்றத்தின் முன்பாக ஆஜராகி விளக்கங்களை அளிக்க வேண்டும். மேலும், மணிப்பூரில் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட பெண்களின் பெயர்கள் எக்காரணத்தைக் கொண்டும் வெளியே வரக்கூடாது, போலீசாரின் பதிவுகள், நீதிமன்ற ஆவணங்கள் என எதையும் பகிரக்கூடாது எனவும் உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.