தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!
ராணுவத்துக்கும் பாதுகாப்புப் படை வீரர்களுக்கும் எனது வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான செய்தியாக இருந்து வருகிறது. இந்த சூழலில் பஞ்சாப் மாநிலம் ஆதம்பூரில் உள்ள விமானப்படை தளத்தில் வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அதில் பேசிய அவர் ” சக்திவாய்ந்த நமது ஏவுகணைகள் சத்தத்துடன் எதிரி நாட்டு இலக்குகளை அடையும்போது, அவர்களுக்கு அந்த சத்தம் ‘பாரத் மாதா கீ ஜெய்’ என்றுதான் கேட்கும்.
பாரத் மாதா கீ ஜெய் என்பது நாட்டிற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்யத் தயாராக இருக்கும் ஒவ்வொரு ராணுவ வீரரின் உறுதிமொழி. நாட்டிற்காக வாழவும், நாட்டிற்காக ஏதாவது செய்யவும் விரும்பும் ஒவ்வொரு குடிமகனின் குரலாகும். விமானப்படை வீரர்களும் அதிகாரிகளும் வரலாறு படைத்துவிட்டனர்.
ராணுவத்துக்கும் பாதுகாப்புப் படை வீரர்களுக்கும் எனது வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவின் உறுதிப்பாட்டை எடுத்துக் காட்டியுள்ளது சிந்தூர் நடவடிக்கை உங்களது தீரச் செயல்கள் இனிவரும் தலைமுறையினருக்கும் ஊக்கமளிப்பதாக உள்ளது. நீங்கள் அனைவரும் உங்கள் இலக்கை முழுமையாக அடைந்துவிட்டீர்கள் என்று நான் பெருமையுடன் சொல்ல முடியும்.
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மற்றும் அவர்களின் விமான நிலையங்கள் அழிக்கப்பட்டது மட்டுமல்லாமல், அவர்களின் தீய வடிவமைப்புகளும் துணிச்சலும் தோற்கடிக்கப்பட்டன. பாகிஸ்தானின் ட்ரோன், அதன் UAVகள், விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் – இவை அனைத்தும் நமது திறமையான வான் பாதுகாப்பின் முன் தோல்வியடைந்தன.
நாட்டின் அனைத்து விமானப்படை தளங்களின் தலைமைக்கும், இந்திய விமானப்படையின் ஒவ்வொரு விமானப்படை வீரருக்கும் நான் மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாகிஸ்தானில் உள்ள எந்த தீவிரவாதிகள் முகாமும் பாதுகாப்பாக இருக்க முடியாது. தீவிரவாத முகாம்களை தாக்க வேண்டும் என்பதே இலக்கு, பாகிஸ்தானை அல்ல. இந்தியாவை குறிவைக்கும் அனைத்து தீவிரவாதிகளையும் ஒழித்துக் கட்டுவோம். தீவிரவாதிகளை அவர்கள் குடியிருக்கும் இடத்திலேயே தாக்கி அழிப்போம். சண்டை நிறுத்தம் என்பது சிறிய இடைவெளிதான் மீண்டும் தாக்குதல் நடத்தினால் நாங்கள் கண்டிப்பாக பதிலடி கொடுப்போம்” எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.