“உங்க ரத்தம் கேமரா முன் மட்டும் ஏன் கொதிக்கிறது?” -பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி!
டிரம்பிற்கு பணிந்து இந்தியாவின் நலன்களை ஏன் தியாகம் செய்தீர்கள்? என பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி வைத்துள்ளார்.

ராஜஸ்தான் : நேற்று தமிழகத்தில் மேம்படுத்தப்பட்ட 9 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி ராஜஸ்தான் பிகானரில் இருந்து காணொளி மூலம் திறந்து வைத்தார்.இந்த ரயில்வே திட்டங்களை தொடங்கிவைத்த பின் பொதுமக்களிடம் பேசிய அவர் ” பாகிஸ்தானுடன் வர்த்தகமும் இல்லை, பேச்சுவார்த்தையும் இல்லை. ஒருவேளை பேச்சுவார்த்தை நடத்தினால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து மட்டும்தான் பேசுவோம்.
என்னுடைய எண்ணம் நிதானமாகத்தான் இருக்கும் ஆனால், தற்போது என் ரத்தம் கொதிக்கிறது. என் நரம்புகளில் ரத்தம் ஓடவில்லை சிந்தூர்தான் (குங்குமம்) ஓடுகிறது” எனவும் மோடி பேசியிருந்தார். இதனையடுத்து, பிரதமர் மோடி பேச்சை விமர்சிக்கும் வகையில், “உங்கள் ரத்தம் ஏன் கேமரா முன்பு மட்டும் கொதிக்கிறது?” என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி கேள்வி எழுப்பியிருக்கிறார்.
கர்நாடக மாநிலம் விஜயநகராவில் நடைபெற்ற “சமர்ப்பணே சங்கல்ப ரேலி” (Samarpane Sankalpa Rally) என்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட ராகுல் காந்தி இது குறித்து பேசியதாவது ” பாஜக ஆட்சியில் பணமும் வளங்களும் பணக்காரர்களுக்கு மட்டுமே செல்கின்றன. ஆனால், காங்கிரஸ் மாதிரியில், பணம் ஏழைகளுக்கு செல்கிறது,
பாஜக ஆட்சியில் நீங்கள் நோய்வாய்ப்பட்டால் கடனில் மூழ்குவீர்கள். காங்கிரஸ் ஆட்சியில் உங்களுக்கு சிகிச்சைக்கு பணம் உங்கள் பாக்கெட்டில் இருக்கும். ஆனால், பாஜக ஆட்சியில் , தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு லட்சக்கணக்கில் செலவு செய்ய வேண்டும். 2018 தேர்தலில் பாஜக 600 வாக்குறுதிகளை அளித்தது, ஆனால் 10 சதவீதம் கூட நிறைவேற்றவில்லை. ஆனால், காங்கிரஸ் 2013இல் 165 வாக்குறுதிகளில் 158ஐ நிறைவேற்றியது மற்றும் 30 புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியது” என தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து மோடி பேசிய வீடியோவை தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் வெளியிட்ட ராகுல்காந்தி “மோடிஜி, வெற்றுப் பேச்சுகளை நிறுத்துங்கள். பேச்சை நிறுத்திவிட்டு நான் கேட்கும் கேள்விகளுக்கு முதலில் பதில் சொல்லுங்கள். பயங்கரவாதம் குறித்த பாகிஸ்தானின் அறிக்கையை நீங்கள் ஏன் நம்பினீர்கள்?. டிரம்பிற்கு பணிந்து இந்தியாவின் நலன்களை ஏன் தியாகம் செய்தீர்கள்? கேமராக்களுக்கு முன்னால் மட்டும் ஏன் உங்கள் இரத்தம் கொதிக்கிறது?நீங்கள் இந்தியாவின் கௌரவத்தை சமரசம் செய்துவிட்டீர்கள்!” எனவும் காட்டத்துடன் கேள்வியை முன் வைத்துள்ளார்.