பிரதமரை வரவேற்க செல்லாதது ஏன்? – பஞ்சாப் முதல்வர் விளக்கம்!

The Punjab Chief Minister explained that it was unfortunate that the Prime Minister canceled his program and went back.

பிரதமர் தனது நிகழ்ச்சியை ரத்து செய்து, திரும்ப சென்றது வருத்தமளிக்கிறது என்று பஞ்சாப் முதல்வர் விளக்கம்.

பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூரில் இன்று ரூ.42,750 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட பிரதமர் மோடி சென்றிருந்தார். மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் பயணத்தை தவிர்த்த பிரதமர், சாலை மார்க்கமாக சென்ற போது ஏராளமான போராட்டக்காரர்கள் சாலையை மறித்ததால் 20 நிமிடங்கள் பிரதமரின் வாகனம் சிக்கியது.

இதனால் பாதுகாப்பு குறைபாடு காரணமாக பிரதமர் மோடியின் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டதாக உள்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது. இந்த நிலையில், தற்போது செய்தியாளர்களிடம் பேசிய பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, இரண்டு உதவியாளர்களுக்கு கொரோனா தொற்று என்பதால் பிரதமரை நேரில் வரவேற்க செல்லவில்லை என்று விளக்கமளித்துள்ளார்.

மேலும், பிரதமரின் வருகையையொட்டி அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் முறையாக செய்யப்பட்டியிருந்ததாகவும், பஞ்சாப்பில் பிரதமர் தனது நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு, திரும்ப சென்றது வருத்தமளிக்கிறது என்றும் கூறியுள்ளார். இதனிடையே, விமான நிலையத்திற்கு நான் உயிருடன் திரும்பி இருக்கிறேன். அதற்காக உங்கள் முதல்வருக்கு நன்றி சொன்னேன் என சொல்லிவிடுங்கள் என்று  பஞ்சாப் அதிகாரிகளிடம் பிரதமர் மோடி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.