இலங்கையுடன், இந்தியா தோளோடு தோள் நிற்கிறது – பிரதமர் மோடி உரை

பொருளாதார நெருக்கடியில் சிக்கி மீண்டு வரும் இலங்கையுடன் இந்தியா தோளோடு தோள் நிற்கிறது என பிரதமர் மோடி பேச்சு.
இரண்டு நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க நேற்று, டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டவர்களை சந்தித்தார். இன்று பிரதமர் மோடியை சந்தித்து, ஆலோசனை மேற்கொண்டார் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க. அப்போது, இரு நாட்டு விவகாரங்கள் பற்றி ஆலோசிக்கப்பட்டது. பின்னர் மக்கள் தொடர்பு, விமான சேவை, எரிசக்தி துறை ஆகிய துறைகளின் கீழ் இந்தியா – இலங்கை இடையே இரு நாட்டு தலைவர்கள் முன்னிலையில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
இலங்கையின் பொருளாதார சீர்திருத்தங்களுக்கு உதவும் வகையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதில், UPI பரிவர்த்தனையை இலங்கையில் அனுமதிக்க அந்நாட்டு அரசுடன் ஒப்பந்தம், நாகை – இலங்கை காங்கேசன்துறை இடையே பயணிகள் படகு போக்குவரத்து தொடங்கவும் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்பின் பேசிய பிரதமர் மோடி, இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கவையும், அவரது குழுவையும் இந்தியாவிற்கு வரவேற்கிறேன்.
அவர் பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், அவருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று நாங்கள் இருதரப்பு, பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்களில் எங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டோம். இலங்கை மக்கள் கடந்த ஆண்டு பல சவால்களை எதிர்கொண்டனர். ஆனால் நெருங்கிய நண்பரைப் போன்று நெருக்கடியான நேரத்தில் இலங்கை மக்களுடன் தோளோடு தோளாக நின்றோம். பொருளாதார நெருக்கடியில் சிக்கி மீண்டு வரும் இலங்கையுடன் இந்தியா தோளோடு தோள் நிற்கிறது என கூறினார்.
மேலும், இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்தவை. கடந்த ஒரு ஆண்டில் இலங்கை பல்வேறு சவால்களை சந்தித்துள்ளது. கடல்வழி, விமானப் போக்குவரத்து, எரிசக்தி வர்த்தகம், சுற்றுலாத்துறை, திறன் மேம்பாடு என அனைத்து துறைகளிலும் இரு நாடுகளின் உறவு மிக முக்கியம். எனவே, இந்தியா-இலங்கை இடையே விமான இணைப்பை மேம்படுத்துவதில் நாங்கள் உடன்படுகிறோம்.
இலங்கையில் தமிழர்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தரப்படும். இலங்கையில் உள்ள தமிழர்களின் நலன் காக்க திட்டங்கள் செயல்படுத்தப்படும். தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் முதல் இலங்கையின் காங்கேசன்துறை இடையே, பயணிகளுக்கான கப்பல் போக்குவரத்து தொடங்குவதற்கான பணிகள் நடந்து வருகிறது எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும், மீனவர் பிரச்சினையை மனிதாபிமான முறையில் அணுக வேண்டும் எனவும் இலங்கை அதிபரிடம் பிரதமர் வலியுறுத்தினார்.
இத்தபின் பேசிய இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே, பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில், இந்தியாவிற்கு வந்தது பெருமையாக உள்ளது. இந்தியாவின் வளர்ச்சி என்பது இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள, அனைத்து நாடுகளுக்கும் நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கிறது. இலங்கையின் பொருளாதார மீட்புக்காக, நாங்கள் பணிபுரிந்து வருகிறோம், இதில் இந்தியாவின் ஒத்துழைப்பும் மிகவும் அவசியமாக உள்ளதுர். பொருளாதார நெருக்கடியின் போது ஆதரவாக நின்ற இந்தியாவுக்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி எனவும் கூறினார்.