போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள சிறு ஆக்கிரமிப்புகளை உடனுக்குடன் அகற்றிட நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னை மாநகராட்சியின் 2023-24-ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. சென்னை மாநகராட்சி மேயர் பிரியா இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள சிறு ஆக்கிரமிப்புகளை உடனுக்குடன் அகற்றிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள சிறு ஆக்கிரமிப்புகளை உடனுக்குடன் அகற்றிடவும் மற்றும் சாலையோரங்களில் கொட்டப்பட்டுள்ள கட்டிட இடுபாடுகளை அகற்றிடவும், ஒவ்வொரு மண்டலத்திற்கு ஒரு வாகனம் வீதம் 15 எண்ணிக்கையில், காற்று மாசினை குறைத்திடும் வகையில், இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் டிப்பர் இணைந்த வகையில் சிறியவகை வாகனம் (CNG Operated Mini Truck with Tipper) ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் தூய்மை இந்தியா திட்ட (SBM) நிதியிலிருந்து கொள்முதல் செய்யப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.
மண்டலம் – 1,2,3,6 (பகுதி), 7 (பகுதி) மற்றும் 8 (பகுதி)யில் ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) நிதியுதவியுடன், கொசஸ்தலையாறு வடிநில பகுதியில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்கும் பணி 46 சிப்பங்களாக பிரிக்கப்பட்டு 2023-24-ஆம் நிதியாண்டில் ரூ.1,000 கோடியில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால்கள் துரிதமாக அமைக்கப்படும். இதனால், திருவொற்றியூர், மணலி, மாதவரம் அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் 30 இலட்சம் மக்கள் பயனடைவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.