கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை! தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? உதயநிதி கேள்வி

கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழக அரசு எடுத்த நடவடிக்கை என்ன என உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

Hero Image

சென்னை : கர்நாடக மாநிலம் ஹனூர் அருகே மூன்று தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன? கடந்த வாரம் தமிழகம் வந்த கர்நாடக முதலமைச்சரிடம் இந்த விவகாரம் குறித்து தமிழக அரசு சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டதா? என சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

கர்நாடக மாநிலம் ஹனூர் அருகே அந்தோணிசாமி, ஜான் ரோஸ் பீட்டர் மற்றும் குமார் ஆகிய மூன்று தமிழர்கள் கடந்த 15-ஆம் தேதி அதிகாலை கர்நாடக வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக ஏற்கனவே சட்டப்பேரவையில் தனது கவனத்தை ஈர்த்திருந்ததாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்நிலையில், இந்த மூன்று பேரின் பிரேதப் பரிசோதனை அறிக்கை தற்போது வெளியாகியுள்ளதாகவும், அதில் பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மூன்று பேரும் மிக அருகில் நிற்க வைக்கப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், அதற்கு முன்பாக அவர்கள் சித்ரவதை செய்யப்பட்டதற்கான அறிகுறிகள் இருப்பதாகவும் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், உயிரிழந்த மூவரின் உடல்களிலும் பலத்த காயங்கள் இருந்ததாகவும், விலா எலும்புகள் முறிந்திருந்ததாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். இதனால், இது சாதாரண துப்பாக்கிச்சூடு சம்பவம் அல்ல என்றும், முழுமையான படுகொலை என்ற கோணத்தில் இந்த விவகாரம் விசாரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மூன்று தமிழர்கள் உயிரிழந்த இந்தச் சம்பவத்தில் தமிழக அரசு இதுவரை மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன என்று கேள்வி எழுப்பிய உதயநிதி ஸ்டாலின், குறைந்தபட்சம் கர்நாடக மாநில அரசிடம் விளக்கம் கேட்டு தமிழக அரசு சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதா என்றும் கேள்வி எழுப்பினார்.

மேலும், கடந்த வாரம் தென் மண்டல மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக கர்நாடக முதலமைச்சர் தமிழகம் வந்திருந்த நிலையில், அவரை நேரில் சந்தித்தபோது இந்தச் சம்பவம் குறித்து தமிழக அரசு சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக கர்நாடக காவல்துறையின் வழக்கமான விசாரணையை மட்டும் நம்பாமல், மேல்மட்ட அளவிலான நீதிவிசாரணை நடத்த வேண்டும் என்று ஏற்கனவே சட்டப்பேரவையில் தான் வலியுறுத்தியிருந்ததாகவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

அந்தக் கோரிக்கை தொடர்பாக கர்நாடக முதலமைச்சரிடம் தமிழக அரசு ஏதேனும் அழுத்தம் கொடுத்துள்ளதா என்பதையும் அவர் அறிய விரும்புவதாகக் குறிப்பிட்டார்.

மேலும், சம்பவம் நடைபெற்ற உடனேயே தமிழக முதலமைச்சரோ அல்லது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களோ கர்நாடகாவுக்குச் சென்று உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மூன்று தமிழர்களின் மரணத்திற்கு உரிய நீதி கிடைக்கும் வகையில் தமிழக அரசு இந்த விவகாரத்தில் முழுமையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தினார்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு தேவையான நிதியுதவி மற்றும் சட்ட உதவிகளை வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

கர்நாடக வனத்துறையினரால் மூன்று தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் தொடர்பாக உண்மை முழுமையாக வெளிக்கொண்டு வரப்பட்டு, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே முக்கியம் எனக் குறிப்பிட்ட உதயநிதி ஸ்டாலின், அதற்குத் தமிழக அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் சட்டப்பேரவையில் தனது கோரிக்கையை முன்வைத்தார்.

கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை! தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? உதயநிதி கேள்வி