பிளஸ் 2 தமிழ் உள்ளிட்ட மொழித் தேர்வில் சுமார் 50 ஆயிரம் மாணவர்கள் ஆப்சென்ட்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2022-23-ஆம் ஆண்டிற்கான 12ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கி நடைபெற்றது. இன்று தொடங்கிய 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 2-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் 3,225 மையங்களில் 8.75 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். தமிழகத்தில் 3,185 மையங்களிலும், புதுச்சேரியில் 40 மையங்களிலும் பொதுத்தேர்வு நடைபெறுகிறது.
பொதுத்தேர்வை தமிழகத்தில் 8.36 லட்சம் மாணவர்களும், புதுச்சேரியில் 14,710 மாணவர்கள் எழுதுகின்றனர். 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு இன்று காலை 10 மணி தொடங்கி மதியம் 1.15 மணி வரை நடைபெற்றது. தேர்வை எழுதி முடித்தமாணவர்கள், தமிழ் முதல் தாள் தேர்வு எளிதாக இருந்ததாகவும், இதில் ஒரு மதிப்பெண் வினாக்கள் மட்டும் கடினமானதாக இருந்ததாகவும் தெரிவித்தனர்.
இந்த நிலையில், 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை இன்று 50,674 பேர் எழுதவில்லை என பள்ளிக்கல்வித்துறை அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளது. அதாவது, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 8 லட்சத்து 51 ஆயிரம் பேரில் முதல் நாளில் தமிழ் உள்ளிட்ட மொழித் தேர்வில் 50,674 மாணவ, மாணவிகள் ஆப்சென்ட் ஆகியுள்ளனர். இதில், பள்ளி தேர்வர்கள் 49,559 பேரும், தனி தேர்வர்கள் 1,115 பேரும் தேர்வு எழுதவில்லை என கூறப்படுகிறது. மேலும், வேலூரில் 2 பேர் தேர்வின்போது ஒழுங்கீன செயலில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.