திமுகவின் 20 மாத கால ஆட்சியில் குடிநீர் திட்டங்களுக்காக ரூ.38,000 கோடி செலவு என பேரவையில் அமைச்சர் கேஎன் நேரு தகவல்.
தமிழக சட்டப்பேரவையில் ஒவ்வொரு அமைச்சர்களுக்கு பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். அந்தவகையில், கேள்வி பதில் நேரத்தில் பேசிய அமைச்சர் கேஎன்.நேரு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
பேருந்து நிலையம்:
அதில், தமிழ்நாட்டில் ரூ.174 கோடி மதிப்பில் 9 நகராட்சிகளில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும். மாநகராட்சி, நகராட்சி பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரூ.60.9 கோடியில் 100 புதிய பூங்காக்கள் அமைக்கப்படும்.
குடிநீர் திட்டம்:
ரூ.7,145 கோடியில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். கோவை, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கான குடிநீர் திட்டங்கள் ரூ.30 கோடியில் செய்லபடுத்தப்படும். புதிதாக உருவாக்கப்பட்ட மாநகராட்சிகளிலும் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என்றார்.
குடிநீர் திட்ட செலவு:
நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் ஜூலையில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும். அதிமுகவின் 10 ஆண்டு கால ஆட்சியில் குடிநீர் திட்டங்களுக்கு ரூ.11,000 கோடிதான் செலவிடப்பட்டுள்ளது. திமுகவின் 20 மாத கால ஆட்சியில் குடிநீர் திட்டங்களுக்காக ரூ.38,000 கோடி செலவிடப்பட்டுள்ளது. சென்னை கொடுங்கையூர் குப்பைக்கிடங்கில் குப்பைகளை அகற்றி, நிலத்தை மீட்டெடுக்க ரூ.600 கோடி செலவில் பணிகள் நடந்து வருகின்றன.
நகர்ப்புற வேலைவாய்ப்பு:
ரூ.330 கோடியில் விக்டோரியா ஹால் புதுப்பிக்கப்படும். நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம் தற்போது 37 பேரூராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டில் மேலும் 50 பேரூராட்சிகளுக்கு விரிவாக்கம் செய்யப்படும். வரும் ஆண்டுகளில் அனைத்து பேரூராட்சிக்கும் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்.
புதிய வார சந்தைகள்:
ரூ.42.45 கோடியில் தொல்காப்பிய பூங்கா மறுமேம்பாடு பணிகள் மேற்கொள்ளப்படும். 28 நகராட்சிகளில் ரூ.123.80 கோடி மதிப்பீட்டில் புதிய வார சந்தைகள் மற்றும் தினசரி சந்தைகள் அமைக்கப்படும். ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி போன்ற நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.