பால் உற்பத்தியாளர்களின் 5 லட்சம் கறவை மாடுகளுக்கு 50% மானியத்தில் காப்பீடு செய்யப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் நாசர் அறிவிப்பு.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பால்வளத்துறை மீதான மானிய கோரிக்கை நடைபெற்றது. அப்போது, சட்டப்பேரவையில் அமைச்சர் நாசர் பால்வளத்துறை சார்ந்த பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
ஆன்லைனில் ஆவின் பொருட்கள்:
இதில், பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பால் மற்றும் பால் பொருட்களை உடனுக்கு உடன் தங்கள் இருப்பிடத்தில் இருந்தபடியே பெற்றுக்கொள்ளவும், ஆவின் விற்பனையை அதிகரிக்கும் நோக்கியிலும், புதிய செயலி மற்றும் இணையதளம் உருவாக்கப்படும் என அறிவித்தார்.
குடும்ப பாதுகாப்பு நிதி:
ஆவின் பண்ணைகளில் பால் பாக்கெட்டுகள் தயாரிக்க ரூ.30 கோடியில் தானியங்கி இயந்திரங்கள் நிறுவப்படும். ஆவின் ஓய்வூதியர் குடும்ப பாதுகாப்பு நிதி (நலநிதி) உருவாக்கப்படும். அதாவது, கருணை ஓய்வூதியர்களுக்காக நிதியுதவி அளிக்க “ஆவின் ஓய்வூதிய குடும்ப பாதுகாப்பு நிதி” உருவாக்கப்படும். கருணை ஓய்வூதியர்கள் இறந்தால் அவரது குடும்பத்திற்கு நிதியுதவி அளிக்க குடும்ப பாதுகாப்பு நிதி உருவாக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஸ்மார்ட் கார்டு:
ஆவின் நுகர்வோர் வசதிக்காக மாதாந்திர பால் அட்டை பெறுதல், புதுப்பிக்கும் பணிகள் முழுவதும் கணினிமயமாக்கப்படும். பணி முழுவதும் கணினிமயமாக்கப்பட்டு மின்னணு பால் அட்டைகள் (e-milk card) அறிமுகம் செய்யப்படும். எனவே விரைவில் ஆவின் நுகர்வோர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்க உள்ளது. பால் உற்பத்தியாளர்கள் வங்கி கடன் மூலம் புதிய கறவை மாடுகள் வாங்க ஆவின் பால்பெருக்க திட்டம் உருவாக்கப்படும் என்றும் ஆவின் பால்பெருக்கு திட்டம் மூலம் ரூ.2 லட்சம் புதிய கறவை மாடுகள் வாங்கப்பட்ட உள்ளது.
கறவை மாடுகளுக்கு மானியம்:
பால் உற்பத்தியாளர்களின் 5 லட்சம் கறவை மாடுகளுக்கு 50% மானியத்தில் காப்பீடு செய்யப்படும். மாதவ்ரத்தில் பால் பண்ணை பூங்கா மற்றும் அருங்காட்சியம் அமைக்கப்படும். சிறந்த பால் உற்பத்தியாளர்கள், சங்க செயலாளர்கள் மற்றும் தொகுப்பு குளிர்விப்பு மைய செயலாளர்களுக்கு ரூ.2 கோடியில் ரொக்க பரிசு வழங்கப்படும் எனவும் அமைச்சர் நாசர் அறிவித்துள்ளார்.
எருமை கன்று வளர்ப்பு திட்டம்:
மேலும், நுகர்வோர் தேவைக்கேற்ப புதிய பால் வகைகள், பால் பொருட்கள் அறிமுகம் செய்யப்படும். அம்பத்தூர் பால் பண்ணை வளாகத்தில் புதிய சாக்லேட் உற்பத்தி அலகு நிறுவப்படும். பால் உற்பத்தியில் எருமை மாடுகளின் பங்களிப்பு முக்கியமாக உள்ளதால் ‘எருமை கன்று வளர்ப்பு திட்டம்’ நடைமுறைப்படுத்தப்படும் என பல்வேறு முக்கிய அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.