இபிஎஸ்-க்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு அக்.17க்கு ஒத்திவைப்பு!

அதிமுக பொதுச்செயலாளர் மீதான டெண்டர் முறைகேடு வழக்கின் விசாரணையை அக்.17ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம். கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் எடப்பாடி பழனிசாமி

EDAPPADI PALANISAMI

அதிமுக பொதுச்செயலாளர் மீதான டெண்டர் முறைகேடு வழக்கின் விசாரணையை அக்.17ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம். கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது நெடுஞ்சாலைத் துறையில் டெண்டர் கோரியதில் ரூ.4,800 கோடி அளவுக்கு முறைகேடு நடந்ததாக குற்றசாட்டு எழுந்தது. இது தொடர்பாக அவர் மீது வழக்குப் பதிவு செய்து, சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து உரிய விசாரணை நடத்தக்கோரி ஆர்.எஸ்.பாரதி 2018ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் சிபிஐ விசாரணை நடத்தலாம் என அனுமதி வழங்கியது. இதனை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.  சிபிஐ விசாரணைக்கு தடை விதித்து, லஞ்ச ஒழிப்புத்துறை அளித்த அறிக்கையை முறையாக ஆய்வு செய்து, அதனடிப்படையில் டெண்டர் முறைகேடு வழக்கை விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. பின்னர் டெண்டர் முறைகேடு வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணை நடைபெற்றது.

அப்போது, எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில் புதிய விசாரணை தேவையில்லை என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பளித்தார். சிறப்பு புலனாய்வு விசாரணை கோரிய ஆர்.எஸ்.பாரதியின் கோரிக்கையை நிராகரித்து, ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட விசாரணையின் அடிப்படையில் இபிஎஸ் மீதான வழக்கில் விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதன்பின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெண்டர் முறைகேடு புகார் குறித்து உச்சநீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சமீபத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.  இவ்வழக்கு இன்றைக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் மீதான டெண்டர் முறைகேடு வழக்கின் விசாரணையை அக்.17ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம். லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே ஆஜரானார்.  அப்போது, லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு நோட்டிஸ் வழங்கி வழக்கை ஒத்திவைக்க லஞ்ச ஒழிப்புத்துறை வலியுறுத்தியுள்ளது.

தங்கள் தரப்பில் ஆவணம் தாக்கல் செய்ய உள்ளதால் நோட்டீஸ் வேண்டாம் என இபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் அரியமா சுந்தரம் வாதிட்டார். இதன்பின் வழக்கு அக்.17ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. மேலும், புகார்தாரர்கள் உள்ளிட்ட பிற தரப்பினருக்கு வழக்கின் விவரங்களை பகிர்ந்துகொள்ள உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.