மே 29, 30ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருமே மே 29, 30 தேதிகளில் மாவட்ட செயலாளர்களுடன் கட்சியின் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளார்.

சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர பணியில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், அதிமுக, தனது கூட்டணியை வலுப்படுத்தி, ஒற்றுமையுடன் செயல்பட்டு வருகிறது. தற்போது பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள அதிமுக, மேலும் பல கட்சிகளுடன் மறைமுகப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகிறது.
தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் உள்ள நிலையில், கட்சியின் வளர்ச்சிப் பணிகளை மேம்படுத்துவது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். அதன்படி, வரும் மே 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், பழனிசாமி தலைமையில் மாவட்ட வாரியாக ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெறவுள்ளன. இதில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் பங்கேற்கவுள்ளனர்.
மே 29-ஆம் தேதி காலை 9:30 மணி: புதுக்கோட்டை, ராமநாதபுரம், மதுரை, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, திண்டுக்கல், கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களின் நிர்வாகிகளுடன் ஆலோசனை.
மாலை 3:30 மணி: ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், கடலூர், நாமக்கல், ஈரோடு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களின் நிர்வாகிகளுடன் கலந்துரையாடல்.
மே 30-ஆம் தேதி காலை 9:30 மணி: திருப்பூர், பெரம்பலூர், அரியலூர், கரூர், கோவை, தஞ்சாவூர், நீலகிரி, திருச்சி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களின் செயலாளர்களுடன் ஆலோசனை.மாலை 3:30 மணி: சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களின் செயலாளர்களுடன் கூட்டம்.