விழுப்புரம் மாவட்டம் கோலியனூரில் பேரறிஞர் அண்ணாவின் 115 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி சண்முகம், கோலியனூர் வடக்கு ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன் தெற்கு ஒன்றிய செயலாளர் சுரேஷ்பாபு கண்டமங்கலம் ஒன்றிய செயலாளர் விழுப்புரம் நகர கழகச் செயலாளர் மற்றும் கழக நிர்வாகிகள் கழக தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய சி.வி சண்முகம், தமிழகத்தை முன்னேறிய மாநிலமாக கொண்டு சென்ற பேரறிஞர் அண்ணாவை திட்டமிட்டு தரக்குறைவாக விமர்சித்தாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். அதன்படி, கூட்டணியில் இருந்து கொண்டு விமர்சிக்கும் அண்ணாமலை தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறக் கூடாது என்ற நோக்கத்துடன் திமுகவுடன் கைக்கோர்த்துள்ளதாக கூறினார்.
மேலும், பேரறிஞர் அண்ணா பற்றி பேசுவதற்கு அண்ணாமலைக்கு எந்த தகுதியும் இல்லை. தராதரமும் இல்லை. இது ஏதோ தெரியாமல் பேசியதில்லை. அண்ணாமலை அவர்கள் திட்டமிட்டு பேரறிஞர் அண்ணாவை இழிவுபடுத்தி இருக்கிறார். தரம் தாழ்ந்து பேசி இருக்கிறார். அண்ணாவை பற்றி உனக்கு என்ன தெரியும் என்று கேட்டுள்ளார்.
இதற்கு பதிலடி தரும் விதமாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,சி.வி.சண்முகம்மாலை 6 மணிக்கு முன்பு ஒரு விதமாகவும், 6 மணிக்கு பின்பு வேறு விதமாகவும் பேசுவார் என்று கூறிள்ளார். அவர் கூறுகையில், நல்ல ஒரு போலீஸ் அதிகாரியைப் பார்க்கும்பொழுது திருடனுக்கு தேள் கொட்டுவது போலதான் இருக்கும். இது மட்டும்தான் என்னுடைய கருத்து.“
“இதற்கு முன்பு யாரெல்லாம் தமிழகத்தில் மந்திரிகளாக இருந்து வசூல் செய்திருக்கிறார்களோ அவர்கள் அனைத்தையும் வசூலாக பார்க்கிறார்கள். அவர்களுக்கு வவூல் செய்துதான் பழக்கம். மந்திரிகளாக இருந்தது வசூல் செய்யத்தான். ஆனால் நாமும் நடைபயணம் சென்றால் வசூல் என்று நினைக்கிறார்கள். ஏனென்றால் அந்த டிஎன்ஏவை மாற்ற முடியாது. அதனால் அவர்கள் கூறும் வார்த்தைக்கெல்லாம் பதிலுக்கு பதில் பேசுவது கூடாது.”
“அதாவது என்னுடைய தரத்தை நான் தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை. நான் யாருடைய அடிமை கிடையாது. கும்பிடு போட்டுக்கொண்டு அவர்கள் சொல்லும் கருத்துக்களை எல்லாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அதைப்போல எங்களுடைய அடிமையும் யாரும் கிடையாது. நான் சொல்லுகின்ற கருத்தை யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. தனிக்கட்சி தனிக் கொள்கை.”
“சனாதனம் எங்கள் உயிர் மூச்சு. அதை பாதுகாக்க முடியவில்லை என்றால் இந்த நாற்காலி எதற்கு. மிரட்டல் உருட்டல் எல்லாம் என்னிடம் வேலைக்கு ஆகாது. நானும் மரியாதை கொடுத்து பழகணும். எனக்கும் கடுசொற்கள் வரும். சி.வி.சண்முகம் அண்ணன் 6 மணிக்கு மேல் ஒரு மாதிரி பேசுவார். மாலை 6 மணிக்கு முன் ஒரு மாதிரி பேசுவார். அதை எல்லாம் நான் சொல்ல விரும்பவில்லை.”
“பத்தாண்டுகள் காவல்துறையில் துப்பாக்கி பிடித்த கை. அதனால் நேர்மை பற்றி சி.வி.சண்முகம் அண்ணன் எனக்கு பாடம் எடுக்கக் கூடாது. அவர் மந்திரியாக இருக்கும்பொழுது என்னென்ன செய்தார் என்று எனக்கு தெரியும். அதையெல்லாம் நான் சொல்ல விரும்பவில்லை. என்னை பொறுத்தவரை என் நேர்மையை கொச்சைப்படுத்தினால் யாராக இருந்தாலும் நான் விடமாட்டேன். அடிபணிந்து போக வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. பாரதிய ஜனதா கட்சிக்கும், தொண்டர்களுக்கும் கிடையாது. இது சுயமரியாத இருக்க கூடிய கட்சி.” என்று கூறியுள்ளார்.
