பொதுச் செயலாளராக இப்போது இபிஎஸ் எடுக்கும் எந்த முடிவும் செல்லாது - எஸ்.பி.வேலுமணி!

பொதுச் செயலாளராக இப்போது இபிஎஸ் எடுக்கும் எந்த முடிவும் செல்லாது என அதற்கான காரணத்தை எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

Hero Image

அதிமுகவில் தொடரும் உள்கட்சி மோதலுக்கு மத்தியில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கடும் விமர்சனம் முன்வைத்துள்ளார். “இப்போது பொதுச் செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி எடுக்கும் எந்த முடிவும் செல்லாது” என அவர் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த வேலுமணி பேசுகையில்,“ஒரு இயக்கத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, விரிசல் ஏற்பட்டால் அந்தத் தேதியில் இருந்து எந்த முடிவும் எடுக்க முடியாது. இது சட்டம். யாரையும் நீக்குவதோ, சேர்ப்பதோ, நியமிப்பதோ செல்லாது. தேர்தல் முடிவுகள் வெளியான அடுத்த நாளே கருத்து வேறுபாடு ஏற்பட்டுவிட்டது. நீதிமன்ற கணக்கிலோ, தேர்தல் ஆணைய கணக்கிலோ மே 11 அன்று யார் பதவியில் இருந்தார்களோ அவர்களே தொடர்ந்து பதவியில் இருப்பார்கள். அதற்குப் பிறகு எடுக்கப்படும் எந்த நடவடிக்கையும் செல்லாது” என்றார்.

வேலுமணி மேலும் கூறியதாவது “பொதுக்குழுவைக் கூட்டி, தோல்விக்கான காரணங்களை ஆராய வேண்டும். அதை விட்டுவிட்டு, தொடர்ந்து நீக்கல்கள், பதவி நீக்கங்கள் என்று செயல்படுவது தவறு. அம்மா மறைவுக்குப் பிறகு எடப்பாடி பழனிச்சாமி எப்படி முதலமைச்சராகவும், பொதுச் செயலாளராகவும் பொறுப்பேற்றாரோ, அதே விதிப்படிதான் இப்போதும் நாங்கள் செயல்படுகிறோம்.

எனவே, பொதுச் செயலாளர் என்ற முறையில் இப்போது அவர் எடுக்கும் எந்த நடவடிக்கைக்கும் சட்டப்பூர்வமான செல்லுபடியாகாது என்பதை கழக நிர்வாகிகளுக்கும், பொதுமக்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என தெரிவித்தார்.

“தேவையில்லாத குழப்பங்களை நிறுத்திவிட்டு, பொதுக்குழுவைக் கூட்டி, தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து, பிரிந்து போனவர்களை ஒன்றிணைத்து, கட்சியை பலப்படுத்த வேண்டும். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் தொடங்கிய இயக்கத்தின் அடிப்படை கொள்கையான திமுக எதிர்ப்பில் உறுதியாக இருந்து, அம்மாவின் ஆட்சியை மீண்டும் கொண்டு வருவதே எங்கள் நோக்கம்” என்றும் வேலுமணி வலியுறுத்தினார்.

பொதுச் செயலாளராக இப்போது இபிஎஸ் எடுக்கும் எந்த முடிவும் செல்லாது - எஸ்.பி.வேலுமணி!