டெல்லியில் நடைபெற உள்ள கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க அதிமுகவுக்கு பாஜக அழைப்பு.
டெல்லியில் வரும் 18-ஆம் தேதி நடைபெறவுள்ள, தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தாண்டு நாடாளுமன்ற மக்களவை தேர்தல் மார்ச், ஏப்ரலில் நடக்க உள்ளது. இதில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற முயற்சியில், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு (என்.டி.ஏ.) தலைமை வகிக்கும் பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இந்த சூழலில் என்டிஏ கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் வரும் 18-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மக்களவை தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. இதனால், நாட்டில் உள்ள பாஜக கூட்டணி கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், பாஜக கூட்டணி கட்சிகள் கூட்டத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, பாஜக கூட்டணி கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க தற்போது வரை எனக்கு அழைப்பு வரவில்லை என்றும் பாஜக தலைவர்கள் எங்களுடன் பேசிக் கொண்டுதான் உள்ளனர் எனவும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
