அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணையில் தொடர்ந்து 3வது நாளாக ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் வாதங்களை முன்வைத்து வருகிறார்.
அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நேற்று முன்தினம் விசாரணை தொடங்கியது. ஜூலை 11-இல் நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், பி.வைரமுத்து ஆகியோர் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த சூழலில், அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று முன்தினம் விசாரணையை தொடங்கியது. முதல் நாளில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பினர் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அமர்வு, வழக்கை நேற்று ஒத்திவைத்தனர்.
மீண்டும் நேற்று மதியம் தொடங்கிய விசாரணையில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இன்றைக்கு பொதுக்குழு தொடர்பான வழக்கை ஒத்திவைத்தனர். இந்த நிலையில், அதிமுக பொதுக்குழு வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் 3வது நாளாக இன்று விசாரணை தொடங்கியுள்ளது.
வழக்கில் அனைத்து தரப்பினரும் இன்றுடன் வாதங்களை நிறைவு செய்ய நீதிபதிகள் அறிவுறுத்தியிருந்தது. தொடர்ந்து 3வது நாளாக ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் வாதங்களை முன்வைத்து வருகிறார். தன்னிச்சையான முறையில் பொதுக்குழு கூட்டத்தை கூட்ட எடப்பாடி பழனிசாமிக்கு அதிகாரமில்லை என்றுள்ளார். எனவே, பொதுக்குழு தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.