அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாகக் கூறப்படும் வழக்கில், விசாரணையை நிறைவு செய்ய 6 மாத அவகாசம் கோரி மனு.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் அதிமுக அமைச்சராக செந்தில்பாலாஜி பதவி வகித்த போது, போக்குவரத்து துறையில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் வாங்கி ஏமாற்றியதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம், செந்தில் பாலாஜி உள்ளிட்ட பலர் மீது புகார் அளிக்கப்பட்டு இருந்தது.
இந்த புகார் தான் உச்சநீதிமன்றம் வரை சென்று 2 மாதத்திற்குள் இந்த புகார் தொடர்பான விசாரணையை முடிக்க வேண்டும் என சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு உத்தரவிட்டு இருந்தது. இதற்கிடையில், அமலாக்கத்துறையினர் செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை மேற்கொண்ட நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகளால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசரணையை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக அமைச்சர் செந்தில் பாலாஜி, புகார் கொடுத்தவர்கள் உள்ளிட்ட 120 பேருக்கு குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தது.
இதனை தொடர்ந்து இன்று உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியின் வழக்கு விசாரணைக்கு வந்தநிலையில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் இந்த வழக்கில் 6 மாதகால அவகாசம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்துள்ளனர்.
அதன்படிசெந்தில் பாலாஜிக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, மேலும் அமலாக்கத்துறை இந்த வழக்கில் விசாரித்து வருவதாகவும் கூறி, இந்த வழக்கின் விசாரணைக்கு மேலும் 6 மாத காலம் அவகாசம் கோரி மத்திய குற்றபிரிவு காவல்துறையினர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
