#BREAKING: 100 நாள் வேலை திட்டத்திற்கு ரூ.949 கோடி ஒதுக்கீடு – அரசாணை வெளியிட்ட தமிழக அரசு!

தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்திற்காக ரூ.949 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணையை வெளியிட்ட தமிழக அரசு.
கிராமப்புறங்களில் 100 நாட்கள் வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் மூலம் ஏழை மக்கள் பலன் அடைந்து வருகின்றனர். இந்த நிலையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் படி நூறு நாள் வேலை திட்டத்திற்காக ரூ.949 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு மத்திய அரசு சார்பில் 75% நிதியும், மாநில அரசு சார்பில் 25% நிதியும் ஒதுக்கப்பட்டதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதனிடையே, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் மாநிலங்கள் பயன்படுத்திய தொகை குறித்த புள்ளி விவரம் நாடாளுமன்ற மக்களவையில் தெரிவிக்கப்பட்டது. மார்ச் 24-ஆம் தேதி நிலவரப்படி, நாடெங்கும் சுமார் 82.85 லட்சம் பணிகள் ரூ.28,150 கோடி செலவில் கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டது. இதில், தமிழகத்தில் அதிகபட்சமாக 4.67 லட்சம் பணிகளுக்கு ரூ.5,413 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதையடுத்து மத்தியபிரதேசம் ரூ.2,806 கோடி செலவில் 6.61 லட்சம் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்திருந்தது.